தற்போதைய செய்திகள்

ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி உதவி – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ வழங்கினார்

தூத்துக்குடி

லடாக் விபத்தில் உயிரிழந்த கோவில்பட்டி ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தெற்கு திட்டங்குளத்தில் லடாக்கில் நடந்த விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் கருப்பசாமி இல்லத்திற்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.கி.செந்தில் ராஜ், விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் ஆகியோர் நேற்று நேரில் சந்தித்து அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும், அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தனது சொந்த பணத்திலிருந்து ரூ.5 லட்சம் நிதி உதவி கருப்பசாமி மனைவி தமயந்தியிடம் வழங்கினார்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசியதாவது:-

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தெற்கு திட்டங்குளம் கிராமத்தை கருப்பசாமி என்பவர் 14 ஆண்டு காலம் ராணுவத்தில் பணியாற்றி வந்திருக்கிறார். தற்பொழுது லடாக் பகுதியிலே நாயக் நிலையில் பணியாற்றி வந்திருக்கிறார். அங்கு விபத்து ஏற்பட்டு அதன் மூலம் அவர் பலியான தகவல் மிகவும் அதிர்ச்சிக்குள்ளானது மட்டுமல்லாமல் மிகுந்த வேதனை அளிக்கிறது.

அவருடைய இழப்பு குடும்பத்திற்கு மட்டுமல்ல நாட்டுக்கே வேதனை அளிக்க கூடிய ஒரு அதிர்ச்சியான சம்பவம். இந்த துயரமான நேரத்திலே அந்த குடும்பத்துக்கு எனது ஆறுதலையும், முதலமைச்சர் சார்பிலே ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். இது என்னுடைய தொகுதி என்ற முறையிலே என்னுடைய சொந்த பொறுப்பிலே இன்றைக்கு நிதி உதவி செய்திருக்கிறேன். அவர்கள் கல்விக்கு தகுந்த வேலையை முதலமைச்சரிடம் அறிவுறுத்தி நிச்சயமாக பெற்றுத்தருவேன்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறினார்.

இந்நிகழ்வின்போது மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர் மணிகண்டன், முக்கிய பிரமுகர்கள் விஜயபாண்டியன், அன்புராஜ், சுப்புராஜ் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் உடனிருந்தனர்.