தற்போதைய செய்திகள்

மனு அளித்த பொதுமக்களுக்கு விரைவில் நலத்திட்ட உதவிகள்- அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் உறுதி

திருப்பூர்

மனு அளிக்கும் பொதுமக்களுக்கு விரைவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் உறுதி அளித்தார்.

கோவை மாவட்டம், உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியம் கொல்லப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு முகாமில், சார் ஆட்சியர் வைத்தியநாதன் முன்னிலையில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்.

பின்னர் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்ந்து சிறப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இம்முகாமில், பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், மின்சாரம், சாலை வசதி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் மற்றும் கிராம ஊராட்சியின் வளர்ச்சிப்பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் மற்றும் பொதுமக்களின் அனைத்து அடிப்படைத் தேவைகளையும் விரைவாக நிறைவேற்றிட வேண்டுமெனவும் அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு நலத்திட்ட உதவிகள் விரைவில் தங்கள் பகுதியிலேயே வழங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் பேசினார்.

இம்முகாமில், முதியோர், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, விலையில்லா வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் தொடர்பான மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட அமைச்சர் அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு
உத்தரவிட்டார்.

தொடர்ந்து, கள்ளிப்பட்டி ஊராட்சி மற்றும் ஏரிப்படடி கொள்ளுப்பாளையம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களையும் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.