தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை – அமைச்சர் பி.தங்கமணி பேட்டி

நாமக்கல்

தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை என்று அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், புதிய அவசர சிகிச்சை ஆம்புலன்ஸ் வாகனங்கள் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணி, கழக மகளிர் அணி இணைச் செயலாளரும், சமூக நலன் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சருமான டாக்டர் வெ.சரோஜா ஆகியோர் 108 அவசரகால 2 ஆம்புலன்ஸ் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இவ்வாகனங்களில் நவீன முறையில் பாதுகாப்புடன் நோயாளிகளை எடுத்துச் செல்ல ஸ்ட்ரெச்சர் வசதி, முழுவதும் குளிரூட்டப்பட்ட அறை, ஆக்சிஜன் வழங்கும் கருவிகள், முதலுதவி மருந்துகள் உள்ளிட்ட உயிர்காக்கும் கருவிகள் உள்ளன. இதன் மூலம் பொதுமக்கள் அவசர கால முதலுதவி சிகிச்சையை இந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் பெற்றுக் கொண்டு, மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக குறித்த நேரத்தில் அழைத்துச் செல்லப்படுவார்கள்.

முன்னதாக ராசிபுரம் அரசு மருத்துவமனையில் தேசிய தர நிர்ணய சான்றிதழ் பெற்றதற்கும், கோவிட்-19 தடுப்பு பணிகளில் பணியாற்றியதற்கும் அம்மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியாளர்கள் உள்ளிட்ட 85 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை அமைச்சர்கள் பி.தங்கமணி மற்றும் அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா ஆகியோர் வழங்கினர்.

இதன்பின்னர் அமைச்சர் பி.தங்கமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை மழை வருவதற்கு முன்பாகவே ஆய்வு கூட்டம் நடத்தி பாதிப்புகள் இருக்க கூடும் இடங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். அளவுக்கு அதிகமாக மழை பெய்யாததால் மாவட்டத்தில் இதுவரை எந்த சேதாரமும் இல்லை. தமிழகத்தில் மழைக் காலம் என்பதால் மின் தேவை குறைந்துள்ளது. மின் தட்டுப்பாடு என்பது இல்லை. கொரோனா காலத்தில் பள்ளிகள், தொழிற்கூடங்கள் இயங்காததால் மின் தேவை குறைவாக தான் உள்ளது. இதனால் மின் பாதிப்புகள் இல்லை.

மத்திய அரசு தமிழக மின்வாரியத்திற்கு தேவையான ரூ.20 ஆயிரம் கோடி அளவிற்கு நிதி வழங்குவதாக கூறியுள்ளது. காற்றாலை, அனல் மின், சூரிய மின் உற்பத்தி, உள்ளிட்ட தனியார் உற்பத்தியாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிதிகளை மின்வாரியம் சார்பாக பட்டியல் கொடுத்துள்ளோம். அந்தப் பட்டியலின்படி மத்திய அரசே நேரடியாக நிதிகளை கொடுத்து விடும்.

வருகின்ற சனிக்கிழமை அரசு விழா உள்ளதால் அதில் கலந்து கொள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகம் வர இருக்கிறார். தோழமை கட்சி என்ற முறையில் நாங்கள் அவரை வரவேற்க உள்ளோம். எங்களது கூட்டணி பலமாகத்தான் உள்ளது. பாஜக மாநில தலைவர் முருகன் வேல் யாத்திரை சம்மந்தமாக நீதிமன்றம் கருத்து கூறியுள்ளது. இதை பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை.

அமைச்சர் பி.தங்கமணி பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் கா.மெகராஜ், நாமக்கல் நகர கழக செயலாளரும், தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.பி.பாஸ்கர், கொல்லிமலை ஒன்றிய கழக செயலாளரும். சேந்தமங்கல் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினருமான சி.சந்திரசேகரன், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் மு. சாந்தா அருள்மொழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.