தற்போதைய செய்திகள்

ரூ.487 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டு குடிநீர் திட்டம் – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்

கரூர்

கரூர் மாவட்டத்தில் ரூ.481 கோடி மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவரும் குடிநீர், மின்சாரம் தொடர்பான பணிகள் குறித்தும், ஊரகப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்தும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மாவட்ட ஆட்சித்தலைவர் சு.மலர்விழி முன்னிலையில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களால் குளித்தலை மற்றும் தோகைமலை பகுதிகளில் 253 குடியிருப்புகளுக்கு குடிநீர்வழங்கும் வகையில் ரூ.52.75 கோடி மதிப்பில் காவேரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை அறிவித்தார். முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் ஆணைக்கிணங்க இத்திட்டம் துரிதப்படுத்தப்பட்டு பணிகள் முழுவதும் தற்போது முடிக்கப்பட்டு நீருந்து நிலையத்தில் இருந்து நீரேற்று நிலையத்திற்கும், பிற மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கும் குழாய்கள் வழியாக குடிநீர் கொண்டுசெல்லும் சோதனை இயக்கப் பணிகள் நடைபெறுகின்றது.

இத்திட்டத்தில் குடியிருப்புகளுக்கு சீரான குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்டப்பட்டுள்ள 30 தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகளில் 28 நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு பணிகள் தொடங்க தாயார் நிலையில் உள்ளது. மீதமுள்ள இரண்டு நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் வகையில் வளையப்பட்டி நான்கு ரோடு மற்றும் கல்லை ஆகிய பகுதிகளில் புதிய மின்மாற்றிகள் அமைத்து மின் இணைப்பு வழங்க குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் மின்சார வாரியத்துடன் இணைந்து உரிய நடவடிக்கை எடுத்து இரண்டு நாட்களுக்குள் இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

க.பரமத்தி மற்றும் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 756 குடியிருப்புகளைச் சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.487 கோடி மதிப்பில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் காவேரி ஆற்றில் நீர் உறிஞ்சு கிணறுகள் அமைக்கப்படவுள்ளது. அதனடிப்படையில் மரவாப்பாளையம் பகுதியில் 4 நீர் உறிஞ்சு கிணறுகளும், சேமங்கி, செவ்வந்தி பாளையம் பகுதிகளில் தலா ஒரு நீர் உறிஞ்சு கிணறும் அமைக்கப்பட்டு அதில் இருந்து சேகரிக்கப்படும் காவேரி நீரானது தாழையூத்துப்பட்டியில் அமைக்கப்படவுள்ள நீர்த்தேக்கத்தொட்டியில் சேகரம் செய்யப்படவுள்ளது.

இங்கிருந்து க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 30 கிராம ஊராட்சிகள் மற்றும் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 கிராம ஊராட்சிகள் என மொத்தம் 50 ஊராட்சிகளிலும் நீர்த்தேக்கத்தொட்டிகள் கட்டப்பட்டு, நீர் வழங்கப்பட்டு அங்கிருந்து குடியிருப்புகளுக்கு விநியோகம் செய்யும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

க.பரமத்தி மற்றும் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 756 குடியிருப்புகளை சேர்ந்த மக்களுக்கு ஒரு நாளைக்கு 16.29 மில்லியன் லிட்டர் நீர் வழங்கும் வகையில் இத்திட்டம் தாயாரிக்கப்பட்டு தமிழக அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரிடம் இத்திட்டத்தின் தேவை குறித்து எடுத்துக்கூறி விரைவில் இத்திட்டத்திற்கான அனுமதி பெறப்படும்.

மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் வகையில் மின்கம்பங்கள் உள்ளதாகவும் அவற்றை இடம்மாற்றி வைக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. அதனடிப்படையில் எந்தெந்த இடங்களில் அவ்வாறு மின்கம்பங்கள் உள்ளது என்பது குறித்து ஆய்வு செய்து அவற்றை மாற்றி அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜேந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.கவிதா, ஊராட்சிகளுக்கான உதவி இயக்குநர் உமாசங்கர், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கண்காணிப்பு பொறியாளர் செந்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நிர்வாகப்பொறியாளர் பிரபுராம், உதவி நிர்வாகப் பொறியாளர் அசோக் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.