மற்றவை

யார் பெற்ற பிள்ளைக்கு யார் உரிமை கொண்டாடுவது? தி.மு.க.வுக்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கண்டனம்

விருதுநகர்

யார் பெற்ற பிள்ளைக்கு யார் உரிமை கொண்டாடுவது என்று திமுகவுக்கு பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதி வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஆலோசனை கூட்டம் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், பால்வளத்துறை அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:- 

முதலமைச்சர் எடப்பாடியார் தலைமையில் ஆட்சியும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கட்சியும் கட்டுக்கோப்புடன் செயல்பட்டு வருகிறது. புரட்சித்தலைவர் உருவாக்கிய இந்த கட்சியை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வளர்த்த இந்த கட்சியை அவர்களது வழியில் முதல்வரும், துணை முதல்வரும் சிறப்பாக வழி நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் கழகம் சார்பாக நடைபெற்று வரும் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் ஒவ்வொறு ஆலோசனை கூட்டத்திலும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கழகத்தினர் உற்சாகமாக கலந்து கொண்டு வருகின்றனர். கட்சி எழுச்சியோடு உள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 281 பூத்துகள் உள்ளன. வாக்காளர் சேர்ப்பு முகாமில் ஒரு வாக்குச்சாவடிக்கு 100 இளம் வாக்காளர்களை கழக நிர்வாகிகள் சேர்க்க வேண்டும். 281 பூத்துக்களில் ஒரு பூத்துக்கு 100 புதிய வாக்காளர்களை நாம் சேர்த்து விட்டால் 28100 புதிய வாக்காளர்களை சேர்த்துவிட முடியும். இந்த 28,ஆயிரத்து 100 வாக்குகளில் 25 ஆயிரம் வாக்காளர்கள் இரட்டை இலைக்குதான் வாக்களிப்பார்கள். 28,000 புதிய வாக்காளர்களை சேர்த்தால் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் நமது கழக வேட்பாளர் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் உறுதியாக வெற்றி பெறுவார். ஒரு ரேசன் கார்டு வாங்கி கொடுத்தால் கூட விசுவாசமாக இருக்கக்கூடியவர்கள் தமிழர்கள்.

எனவே புதிய வாக்காளர்களை நாம் சேர்த்துவிட்டால் உறுதியாக அவர்களது வாக்குகள் இரட்டை இலைக்குதான் கண்டிப்பாக கிடைக்கும். இரட்டை இலை சின்னம் பொருத்திய பேட்ஜ் அணிந்து கொண்டு புதிய வாக்காளர்களை சேர்க்க நமது வாக்குச்சாவடி முகவர்கள் செல்ல வேண்டும். ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி கழக விசுவாசிகள் நிறைந்த பகுதியாகும். கழக தலைவர்களை விமர்சனம் செய்து பேசினால் அந்த இடத்தை விட்டு வெளியேற முடியாத அளவுக்கு வெறித்தனமான உள்ள தொண்டர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத்தில் உள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் 7 தொகுதிகளிலும் கழகம் மாபெரும் வெற்றிபெற உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் நமக்கு களத்தில் எதிரிகளே கிடையாது. எதிர் அணியில் உள்ளவர்கள் எலி வேட்டைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள், நாம் புலி வேட்டைக்கு சென்று கொண்டிருக்கிறோம். விருதுநகர் மாவட்டத்தில் கே.கே.எஸ்.எஸ்.ஆர்., தங்கம் தென்னரசு நாடகம் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இந்த இரண்டு முன்னாள் அமைச்சர்களும் விருதுநகர் மாவட்டத்திற்கு ஏதாவது ஒரு திட்டத்தை கொண்டு வந்தார்களா. வல்லநாடு கூட்டு குடிநீர், சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டம், முக்கூடல் கூட்டு குடிநீர் திட்டம் உட்பட 8 கூட்டுக்குடிநீர் திட்டத்தை கொண்டுவந்தது கழகம்.. விருதுநகர் மாவட்டத்திற்கு அரசு மருத்துவக் கல்லூரியை கொண்டு வந்தது கழகம். விரைவில் பல் மருத்துவக் கல்லூரி கொண்டு வரப்போகிறது. விருதுநகர் மாவட்டத்திற்கு எந்த திட்டத்தை நாங்கள் கேட்டாலும் உடனடியாக ஒப்புதல் வழங்கும் முதல்வராக தமிழக முதல்வர் எடப்பாடியார் செயல்பட்டு வருகின்றார்.

வடநாட்டு வாத்தியார் எழுதி கொடுத்ததை படித்துக் கொண்டு விருதுநகர் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரியை நாங்கள் தான் கொண்டு வந்தோம் என்று ஸ்டாலின் கூறுவது வேடிக்கையாக உள்ளது. 10 வருடமாக ஆட்சியில் இல்லாத திமுக எப்படி திட்டங்களை கொண்டு வர முடியும். சாத்தூரில் அரசு கலைக்கல்லூரி, ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு கலைக்கல்லூரி, சிவகாசியில் அரசு கலைக்கல்லூரி, அருப்புக்கோட்டையில் அரசு கலைக்கல்லூரி, வத்திராயிருப்பு புதிய தாலுகா அலுவலகம், வத்திராயிருப்பு, திருவில்லிபுத்தூர் பகுதிகளில் புதிய சாலைகள் இப்படி விருதுநகர் மாவட்டத்திற்கு மட்டும் 4 அரசு கலை அறிவியல் கல்லூரியை கொண்டு வந்தது அண்ணா திமுக. ஆனால் யாரோ பெத்த பிள்ளைக்கு நான் அப்பன் என்று கூறுவதை போல கழகம் கொண்டு வந்துள்ள திட்டங்களுக்கு திமுக உரிமை கொண்டாடுகிறது.

கழகம் கஷ்டப்பட்டு செயல்படுத்திய கொண்டு வந்துள்ள திட்டங்களுக்கு உரிமை கொண்டாடுவதை திமுகவினர் நிறுத்திக்கொள்ள வேண்டும். நீங்கள் உழைத்து கொண்டு வந்த திட்டங்களை கூறுங்கள். நாங்கள் கஷ்டப்பட்டு கொண்டு வந்த திட்டங்களுக்கு நீங்கள் உரிமையை கொண்டாடாதீர்கள். திமுக ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது இன்னும் இந்த மாவட்டத்தை சேர்ந்த தங்கம்தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆரை சிலர் அமைச்சர், அமைச்சர் என்று அழைப்பதை பொதுமக்கள் நக்கலாகவும் கிண்டலாக பார்க்கின்றனர். அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி ஏழை மாணவர்களும் மருத்துவக் கல்லூரியில் படிக்க முடியும் என்று நிலைமை உருவாக்கியவர்கள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம்.

இந்தத் திட்டத்திற்கும் ஸ்டாலினுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. ஸ்டாலின் எந்த விதத்தில் இந்த திட்டத்திற்கு உரிமை கொண்டாடுகிறார். ஸ்டாலின் போடும் பகல் வேஷம் எப்போதும் எடுபடாது. ஸ்டாலின் பேசுவது எல்லாம் பொய் பொய்யாகவே பேசுகின்றார். தொகுதிக்குள் ஒரு லைட் நாங்கள் போட்டால் கூட நாங்கள் தான் லைட் போட சொன்னோம் என்று திமுகவினர் கூறுகின்றனர். கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி விரைவில் கட்சி ஆரம்பிக்கப் போகிறார். ஸ்டாலினுக்கு ஆப்பு வைக்க அவரது அண்ணன் அழகிரி கிளம்பிவிட்டார்.

கருணாநிதியின் சொத்தை பிரித்து கொடுக்க சொல்லி ஸ்டாலின் மீது அழகிரி புகார் கொடுத்தால் 1லட்சம் கோடி சொத்தை பிரித்து கொடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் அண்ணா அறிவாலயத்தில் சமபங்கு உரிமை, கோபாலபுரத்தில் சமபங்கு உரிமை, வேளச்சேரி சொத்தில் சமபங்கு உரிமை என கருணாநிதியின் குடும்ப சொத்தில் சமபங்கு நாங்களே பிரித்து மு.க.அழகிரியிடம் கொடுப்போம் கருணாநிதியின் ஒரு லட்சம் கோடி சொத்தை சம பங்காக பிரித்து கொடுத்து விடுவோம் திமுகவில் குடும்பம் குடும்பமாக மட்டுமே இருப்பார்கள். கருணாநிதி மகன் ஸ்டாலின், ஸ்டாலின் மகன் உதயநிதி, அவரது மகன் இப்படி குடும்ப கட்சியாகவே திமுக செயல்பட்டு வருகின்றது.

திமுகவில் உழைக்கிறவன் உழைத்துக் கொண்டேதான் இருப்பான். சாப்பிடுபவன் சாப்பிட்டுக் கொண்டேதான் இருப்பான். உதயநிதி ஸ்டாலின் மீது நயன்தாரா புகார் கூறியுள்ளார். புகாரில் உண்மை இருந்தால் போக்சோ சட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்டாலினின் மிரட்டலுக்கெல்லாம் கழகத்தினர் பயப்பட மாட்டார்கள். தமிழகத்திற்கு கொண்டு வந்த திட்டங்கள் பற்றி ஸ்டாலினுடன் நேருக்கு நேராக விவாதிக்கத் நான் தயாராக உள்ளேன். தமிழக மக்களை ஏமாற்றி ஒரு லட்சம் கோடி சொத்து சேர்த்து இருக்கின்றீர்களே தவிர வேற என்ன திட்டங்களை தமிழக மக்களுக்கு திமுகவினர் கொடுத்துள்ளனர்.

அனைவரையும் சாப்பிட வைத்து அழகு பார்க்கும் கட்சி கழகம். நான் ஒன்றும் மிட்டா மிராசுதாரர் குடும்பம் கிடையாது, அடித்தட்டு தொண்டனாக இருந்து இன்று அமைச்சராக உங்கள் முன் நின்று கொண்டிருக்கின்றேன். வார்டு செயலாளராக பணியாற்றி இந்த மாவட்டக் கழகச் செயலாளராக அமைச்சராக உங்கள் முன் நின்று கொண்டிருக்கின்றேன். திமுகவில் அடிமட்ட தொண்டன் மேல வரவே முடியாது. அதிமுக ஆட்சிக்கு தமிழக மக்கள் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.