தற்போதைய செய்திகள்

வீடுவீடாக சென்று பொதுமக்களிடம் அமைச்சர் பி.தங்கமணி குறை கேட்பு

நாமக்கல்

குமாரபாளையத்தில் அமைச்சர் பி.தங்கமணி வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் நேரில் குறைகளை கேட்டறிந்தார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சிக்குபட்ட வார்டுகளில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட 1-வது வார்டில் பொதுமக்களிடம் கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணி கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

1-ஆவது வார்டு பொதுமக்களின் வீடுகள்தோறும் நேரில் சென்று அமைச்சர் பி.தங்கமணி பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இன்றைய நிகழ்ச்சியில் 300 மனுக்கள் பெறப்பட்டன. இதனையடுத்து பெறப்பட்ட மனுக்களை உடனடியாக ஆய்வு செய்து முதியோர் உதவித்தொகை ரூ.1000-ம் வீதம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு முன்னுரிமை பெற்ற 15 பயனாளிகளுக்கு உடனடியாக அதற்கான ஆணைகளை அமைச்சர் பி.தங்கமணி வழங்கினார்.

பின்னர் அமைச்சர் பி.தங்கமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று உரிய காலத்தில் தீர்வு காணப்பட்டு வருகிறது நாமக்கல் மாவட்டத்தில் இதுபோன்ற வீடுகள்தோறும் சென்று கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. மக்களுக்கு ஒரு வார காலத்திற்குள் தீர்வு காணப்படும். வீட்டுமனை பட்டா கோரும் பொது மக்களுக்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இரு தினங்களுக்கு முன்பு முதலமைச்சர் சேலம் மாவட்டம், அரசு நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் வைத்து இப்பகுதியை சேர்ந்த மாற்றுத் திறனாளி இளைஞர் சாதிக் பாஷா என்பவர் வேலை வேண்டி மனு அளித்தார் இதனை கருத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுத்து இன்று குமாரபாளையம் நகராட்சியில் அந்த இளைஞருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது இதுபோன்று பொதுமக்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறது.

தமிழகத்தில் மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் கோவிட் 19 கட்டுப்படுத்தப்பட்டு பொதுமக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சிகளின் பொய் பிரச்சாரங்களை முறியடித்து தமிழக அரசு செயல்பட்டு வருவதால், இந்திய அளவில் நோய்த் தடுப்பில் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது.

மின் வாரிய பணியாளர்கள் அவர்களாகவே ஒப்பந்த தொழிலாளர்களை ஏற்பாடு செய்து முறையான பாதுகாப்பு இல்லாமல் மின் பராமரிப்பு வேலைக்கு அனுப்பக்கூடாது. அதுபோன்ற நேரங்களில் மின் விபத்துகள் ஒரு சில இடங்களில் ஏற்பட்டுள்ளன. இது குறித்து உடனடியாக ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்துள்ளோம். மின்வாரிய பராமரிப்பிற்கு போதிய உபகரணங்கள் உள்ளன. மின்வழித் தடங்களில் வேலை பார்க்கும் பணியாளர்கள் தகுந்த பாதுகாப்பு அம்சங்களுடன் வேலை செய்வதை மின்வாரிய அதிகாரிகள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மின் விபத்து போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளப்படும்.

தமிழகத்தில் நகராட்சிகள் அளவில் முதல்முறையாக, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சியில் ரூ. 200 கோடி மதிப்பீட்டில் புதைவட மின் கம்பி அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளன. அடுத்த மாதத்திற்குள் முழுமையாக முடிவடைந்து, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் கா.மெகராஜ், குமாரபாளையம் நகர கழக செயலாளரும், நகர கூட்டுறவு வங்கி தலைவருமான ஏ.கே.நாகராஜன், முன்னாள் நகர கழக செயலாளர் எம்.எஸ்.எஸ்.குமணன், திருச்செங்கோடு வருவாய்க் கோட்டாட்சியர் ப.மணிராஜ், குமாரபாளையம் வட்டாட்சியர் ம.தங்கம், வருவாய்த்துறை, நகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.