தற்போதைய செய்திகள்

நந்தன் கால்வாய் புனரமைப்பு திட்டத்துக்கு 1.35 ஏக்கர் நிலம் விவசாயிகள் ஒப்படைப்பு – அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் தான பத்திரத்தை வழங்கினர்

விழுப்புரம்

நந்தன் கால்வாய் புனரமைப்பு திட்டத்துக்கு விவசாயிகள் 1.35 ஏக்கர் நிலத்திற்கான தான பத்திரத்தை அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் வழங்கினர்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில ஊரகவாழ்வாதார இயக்கம் சார்பில் ஊராட்சி அளவிலான 10 குழு கூட்டமைப்புகளுக்கு பெருங்கடன் நலத்திட்ட உதவிக்கான ரூ.197.95 லட்சம் மதிப்பீட்டிலான காசோலையினையும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பொதுநிதி திட்டத்தின் கீழ் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.4920 வீதம் 15 மாற்றுத்திறனாளிகளுக்கு மொத்தம் ரூ.78,800 மதிப்பீட்டில் நவீன காதொலிக் கருவிகளையும், முதலமைச்சரின் பொது நிவாரணநிதியிலிருந்து பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 4 குடும்ப வாரிசுதாரர்களுக்கு ரூ.7 லட்சத்திற்கான காசோலையினையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 1 பயனாளிக்கு ரூ.4120 மதிப்பீட்டில் இலவசதையல் இயந்திரம் என மொத்தம் ரூ.2 கோடியே 58 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சி.வி.சண்முகம் பயனாளிகளுக்கு வழங்கினார்.

முன்னதாக வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் நந்தன் கால்வாய் புனரமைப்பு திட்டத்திற்கு செஞ்சி வட்டம் துத்திப்பட்டு, சித்தரசூர் ஆகிய கிராமத்தில் 1.35 ஏக்கர் விவசாய நிலத்தினை 19 விவசாயிகள் தாமாக முன்வந்து தானசென்டில்மெண்ட் செய்து அதன் பத்திரத்தினை அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் விவசாயிகள் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா.பி.சிங், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைதிட்ட இயக்குநர் வெ.மகேந்திரன், செயற்பொறியாளர் பொதுப்பணித்துறை ஜவகர், தனித்துனைஆட்சியர் அ.அம்புரோஸியாநேவிஸ்மேரி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரகுபதி, வருவாய் கோட்டாட்சியர் ராஜேந்திரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் குமார், மகளிர் திட்ட உதவி அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.