
கூட்டுறவு சங்க விவகாரம்- களைக்கு பதிலாக பயிரை பிடுங்குதா?
அரசுக்கு எதிர்கட்சி துணை கொறடா சு.ரவி கண்டனம்
ராணிப்பேட்டை
கூட்டுறவு சங்க விவகாரத்தில் களைக்கு பதிலாக பயிரை பிடுங்கிய தி.மு.க. அரசுக்கு ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சி துணை கொறடாவுமான சு.ரவி எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை என்ற அடிப்படையில் 2018 மார்ச்சில் 18,435 கூட்டுறவு சங்கங்களுக்கு ஜனநாயக ரீதியில் தேர்தல் நடைபெற்றது.
கழகத்தை சேர்ந்த கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிகளை பறிக்க வேண்டுமென்ற உள்நோக்கத்தோடு ஸ்டாலின் 5 ஆண்டுகள் பதவி காலமாக இருந்ததை 3 ஆண்டுகளாக குறைக்கும் சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறார். இது ஒரு மிகப்பெரிய ஜனநாயக படுகொலை.
கழக ஆட்சியில் சிறப்பாக செயல்பட்டு வரும் கூட்டுறவு சங்கங்கள் தற்போது கொண்டு வந்துள்ள சட்டத்தால் நொடிந்துவிடும். இதனால் அடித்தட்டு மக்கள் பாதிக்கும் அபாயம் ஏற்படும். முதலமைச்சர் ஸ்டாலின் களை எடுக்கிறேன் என்று சொல்லி பயிரை பிடுங்கி இருக்கிறார்.
அதற்கும் மேலாக சொல்லப்போனால் நிர்வாக ரிதியாலும், நிதி சிக்கன ரீதியாலும் லாபம் இல்லாத சட்டமாக தான் இதை மக்கள் பார்க்கிறார்கள். மூட்டை பூச்சிக்கு பயந்து, வீட்டை கொளுத்திய கதையாகவே ஸ்டாலின் கொண்டு வந்துள்ள இந்த சட்டத்தை மக்கள் விமர்சிக்கிறார்கள்.
இவ்வாறு ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளரும், எதிர்க்கட்சி துணை கொறடாவுமான சு.ரவி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.