தற்போதைய செய்திகள்

பருவமழையை எதிர்கொள்ள கலெக்டர் தலைமையில் குழு – அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி

திருவாரூர்

பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வருவாய்த் துறை அலுவலர்கள் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களுடனான வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு, புயல் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்து கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சாந்தா, கூடுதல் ஆட்சியர் கமல் கிஷோர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் அமைச்சர் ஆர்.காமராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட ஆட்சியர் தலைமையில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மாவட்டம் முழுவதும் 1 லட்சம் காலி சாக்குகள், 15 ஆயிரம் மணல் மூட்டைகள், 5000 மின்கம்பங்கள் 30 மின்மாற்றிகள் போன்றவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுதே போலீசாரை மிரட்டும் கட்சியாக திமுக உள்ளது. ஆளும் கட்சியாக திமுக வந்தால் மக்களின் நிலை என்ன ஆகும். அராஜகம் அவர்களின் கூட பிறந்தது. போலீசாரின் கடமையை செய்ய விடாமல் தடுப்பது மிகப் பெரிய தவறு. இதை எல்லா காலங்களிலும் திமுக தொடர்ந்து செய்து வந்துள்ளது. திர்க்கட்சித் தலைவர் தனது கட்சியை நடத்தினால் மட்டும் போதும். ஆட்சியை முதலமைச்சர், அமைச்சர்கள், அதிகாரிகள் நடத்துவார்கள்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.