தற்போதைய செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கூடுதலாக 2 ஆம்புலன்ஸ்கள் – என்.தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார்

கன்னியாகுமரி

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.அரவிந்த் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 2 ஆம்புலன்ஸ் வாகனங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு, தற்போதைய கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான, உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு தேவையான உணவு மற்றும் தரமான சிகிச்சை உள்ளிட்ட மருத்துவ வசதிகளை சிறப்புடன் வழங்கி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில், கடந்த 2008-ம் ஆண்டு முதல் இதுவரை 15 ஆம்புலன்ஸ்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. கடந்த 10.11.2020 அன்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகைதந்து, மக்கள் நல்வாழ்வுத்துறையினருடன் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு, மேலும் கூடுதல் ஆம்புலன்ஸ்கள் வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது.

அதனடிப்படையில், இரண்டு ஆம்புலன்ஸ்கள் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. இந்த வாகனங்கள் மூலம் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களை உடனுக்குடன் மருத்துவமனைக்கு, தாமதமின்றி அழைத்து சென்று விரைவாக சிகிச்சைகள் அளிக்க முடியும்.

இவ்வாறு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித்தலைவர் எஸ்.மெர்லியன்ட் தாஸ், மாவட்ட ஆவின் பெருந்தலைவர் எஸ்.ஏ.அசோகன், அரசு ரப்பர் வளர்ப்போர் கூட்டுறவு விற்பனை சங்கத்தலைவர் டி.ஜாண்தங்கம், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணைய உறுப்பினர் அ.ராஜன், மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் எ.பிரகலாதன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் போஸ்கோ ராஜ், ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தலைவர் ஆர்.அய்யப்பன்;, அறங்காவலர் குழு உறுப்பினர் எம்.ஜெயசந்திரன் (எ) சந்துரு, 108 ஆம்புலன்ஸ் மண்டல மேலாளர் ரஞ்சித் விஸ்வநாதன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெபின் கிங்ஸ்டன் ராஜ், வி.டாரதி சாம்சன், சுகுமாரன், வழக்கறிஞர் கே.எல்.எஸ்.ஜெயகோபால், எஸ்.கிருஷ்ணதாஸ், சிவகந்தன், ரபீக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.