தற்போதைய செய்திகள்

நிவர் புயலை எதிர்கொள்ள மின்வாரியம் தயார் – அமைச்சர் பி.தங்மணி பேட்டி

சென்னை

நிவர் புயல் எவ்வளவு வேகத்தில் வந்தாலும் அதனை எதிர்கொள்ள மின்துறை தயாராக உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை மற்றும் நிவர் புயல் முன்னெச்செரிக்கை நடவடிக்கை தொடர்பாக சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்திலிருந்து மண்டல தலைமை பொறியியாளர்களுடனும், அதிகாரிகளுடனும் மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி கணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

தொடர்ந்து அமைச்சர் பி.தங்கமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

நிவர் புயலால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க மின் துறை தயாராக உள்ளது. தேவையான அளவு மின்கம்பங்கள் கையிருப்பு உள்ளன, வருகின்ற 25-ஆம் தேதி புயல் கரையை கடக்கும்போது மக்களின் பாதுகாப்புக்காக மின்சாரம் துண்டிக்கப்படும். அதன் பிறகு மீண்டும் மின்சாரம் வழங்கப்படும் அதை யாரும் மின்வெட்டு என்று நினைக்க வேண்டாம்.தாழ்வான பகுதியில் இருக்கக்கூடிய மின்கம்பங்களை உடனடியாக சரி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகளவு மழை பெய்யக் கூடும் என்பதால் கடலூர் மாவட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

புயல் கரையை கடக்கும்போது மின் கம்பங்கள் சேதம் அடைந்தால் அதை சீரமைக்க ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன, 100 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசினாலும் சமாளிக்க மின்சாரத்துறை தயார்.காரைக்காலுக்கும், மகாபலி புரத்துக்கும் இடையே புயல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே 4, 5 மாவட்டங்களில் மின்கம்பங்கள், உபகரணங்கள் மற்றும் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளன.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.1½ லட்சம் மின்கம்பங்கள் தயாராக உள்ளன. மரம் விழுந்தால் அதனை அகற்றி மின் இணைப்பு தர உபகரணங்கள் அந்தந்த பகுதியில் தயாராக உள்ளன.கஜா புயலின் போது 3 லட்சத்து 30 ஆயிரம் மின் கம்பங்கள் புதிதாக போட்டு, மின் இணைப்பை விரைவாக கொடுத்தோம். இப்போது புயலினால் அந்த அளவு பாதிப்பு இருக்காது என நினைக்கிறோம். உடனடியாக மின் இணைப்பு தர 24 மணி நேரமும் மின்சார துறை தயார் நிலையில் உள்ளது.

கடலூரில் அதிக மழை இருக்கும் என்று கூறப்படுகிறது. கடலூரை பொறுத்தவரை புதைவழி மின்கம்பி போடுவது 75 சதவிகித பணிகள் முடிவடைந்து விட்டன.மகாபலிபுரம் நகர் முழுவதும் புதைவழி மின்கம்பி போடப்பட்டுள்ளது. எனவே புயல் கரையை கடந்தாலும் அங்கு பாதிப்பு இருக்காது.சென்னையிலும் 100 சதவிகித புதைவழி மின்கம்பி போடப்பட்டு விட்டது. பெரம்பூரில் மட்டும் 6 மாதத்தில் பணி முடிவடையும். சி.சி.ஆர். சாலையில் இன்னும் போடவில்லை. எங்கு எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் உடனடியாக சரி செய்யப்படும்

100 கி.மீ. வேகத்தில் புயல் வீசினாலும் அதனை சமாளிக்க தயாராக இருக்கிறோம். புயல் எந்த இடத்துக்கு மாறினாலும் அதனை சந்திக்க மின்துறை தயார் நிலையில் உள்ளது.

இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.