தற்போதைய செய்திகள்

அனைத்து தரப்பு மக்களுக்கும் கழக ஆட்சியில் நலத்திட்ட உதவி – அமைச்சர் ஆர்.காமராஜ் பேச்சு

திருவாரூர்

கழக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திருவாரூர் வட்டத்திற்குட்பட்ட 532 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தலைமை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.காமராஜ் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா தந்த திட்டங்களை அப்படியே தந்து, தமிழக மக்களின் நலன்காக்கின்ற அரசாகவும், ஏழை, எளிய சாதாரண மக்களின் எண்ணங்களை நிறைவேற்றுகின்ற முதல்வராகவும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திகழ்கிறார்.கொரோனா தொற்று போன்ற இந்த இக்கட்டான காலகட்டத்திலும் மக்கள் நலத்திட்டங்களை உடனுக்குடன் மக்களுக்கு அளிக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவின்பேரில் சீரிய முறையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், முதியோர் உதவித்தொகை, ஆதரவற்ற விதவை உதவித்தொகை, ஊனமுற்றோர் உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்டவர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை (ஆண்கள்), திருமண உதவித்தொகை (பெண்கள்), முதிர்கன்னி உதவித்தொகை என மனு அளித்தவர்களுக்கு உடனுக்குடன் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் திருவாரூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் திருவாரூர் வட்டத்தினை சேர்ந்த 532 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அம்மா அவர்களின் நலத்திட்டங்கள் அனைத்து நிலை மக்களும் பயன்பெறுகின்ற வகையில் அமைந்து, அனைத்து நிலை மக்களையும் காக்கின்ற அரசாக விளங்குகிறது.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் பேசினார்.

இந்நிகழ்வில் கூடுதல் ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர், மாவட்ட வருவாய் அலுவலர் செ.பொன்னம்மாள், திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசந்திரன், திருவாரூர் வட்டாட்சியர் நக்கீரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.