தற்போதைய செய்திகள்

ஆம்புலன்ஸ் சேவையை விரிவுபடுத்த நடவடிக்கை – அமைச்சர் கே.பி.அன்பழகன் உறுதி

தருமபுரி

தருமபுரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் ஆம்புலன்ஸ் சேவையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் உறுதி அளித்துள்ளார்.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 108 ஆம்புலன்ஸ் சேவையை உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்விற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.பி.கார்த்திகா தலைமை தாங்கினார்.

விழாவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-

தருமபுரி மாவட்டத்தில் சராசரியாக மாதத்தில் 2500 பேர் ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக கர்ப்பிணி தாய்மார்கள் மாதத்தில் சராசரியாக 850 பேரும், சாலை விபத்தில் 450 பேரும் அவசரகால சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளுக்கும் அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் சேவை கிடைக்கும் வகையில் மேலும் இத்திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.