சிறப்பு செய்திகள்

7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம் – முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை:-

தென்மேற்கு மற்றும் தென் கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுவடைந்து, அதனைத் தொடர்ந்து 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுவடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (25-ந்தேதி) பிற்பகலில் காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே புதுவை அருகே கரையை கடக்கக்கூடும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழக வட கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள நிவர் புயல் 25ம்தேதி (நாளை) அன்று மாமல்லபுரம், காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்ற இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து உடனடியாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் எனது தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக ஏற்கனவே, 18.9.2020 அன்று தலைமைச் செயலாளர் தலைமையிலும், 12.10.2020 அன்று எனது தலைமையிலும், 21.10.2020 அன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் தலைமையிலும், விரிவான ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்றன. பேரிடர் காலங்களில் கண்காணிக்கவும், அறிவுரைகள் வழங்கவும், 36 மாவட்டங்களுக்கும் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களுக்கும் மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள், கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு, மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள வடகிழக்கு பருவமழை – முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும், எனது உத்தரவின்படி, கடலூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் வருவாய் நிர்வாக ஆணையர் நேரடியாக சென்று வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். புதிதாக உருவாகியுள்ள நிவர் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி, 24ம்தேதி கடலோர மாவட்டங்களில் மிக கனமழையும், 25-ந்தேதி மாலை பாண்டிச்சேரி அருகில் கரையை கடக்கும் போது, மிக கனமழையுடன் 120 கிலோமீட்டர் வேகத்தில் புயல் காற்றாக வீசும் என வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது. இதனை எதிர்கொள்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைத்தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு கீழ்க்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள நான் உத்தரவிட்டுள்ளேன்.

வருவாய், உள்ளாட்சி, தீயணைப்பு, பொதுப்பணி, நெடுஞ்சாலை, நகராட்சி, மின்சார வாரியம், சுகாதாரம் மற்றும் பிற துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் அடங்கிய மீட்புக் குழுவினர், 23.11.2020 அன்று மாலையிலிருந்து போதுமான எரிபொருளுடன் ஜே.சி.பி. மற்றும் லாரி, மின்சார மரம் அறுக்கும் இயந்திரங்கள், மணல் மூட்டைகள் மற்றும் போதுமான மின் கம்பங்களுடன் பாதிப்பு உள்ளாகக்கூடிய பகுதிகளில் முகாமிட வேண்டும்.

புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சம்பந்தப்பட்ட கண்காணிப்பு அலுவலர்களும் முகாமிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். பாதிப்பு உள்ளாகக்கூடிய பகுதிகளில் உள்ள மக்களையும், பாதுகாப்பு இல்லாத வீடுகளில் வசிக்கும் குடும்பங்களையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிவாரண முகாம்களுக்கு உடனடியாக அழைத்துச் செல்ல வேண்டும்.

நிவாரண முகாம்களில் குடிநீர், சுத்தமான கழிவறை, ஜெனரேட்டர் மூலம் மின்வசதி, பொதுமக்களுக்கு உணவு தயாரிக்க போதுமான அளவில் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப்பொருட்கள், சமையல் பாத்திரங்கள், தேவையான எரிவாயு அடுப்புகள், சிலிண்டர்கள், உணவு தயாரிக்க சமையலர்கள், பொதுமக்களுக்கு தேவையான பாய் மற்றும் போர்வை போன்ற வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு உள்ளும், 24.11.2020 மதியம் 1.00 மணி முதல் பேருந்து போக்குவரத்து மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது. பொதுமக்களும், தங்கள் சொந்த வாகனங்கள் மூலம், அத்தியாவசிய தேவைகளைத் தவிர மற்ற தேவைகளுக்காக பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்க கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.