சிறப்பு செய்திகள்

நிவர் புயல் பாதுகாப்பு : அமைச்சர், அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை

சென்னை

தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி. இன்று ( நேற்று) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுவடைந்து, அதனைத் தொடர்ந்து 24 மணி நேரத்தில் தீவிரப் புயலாக வலுவடைந்து, வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 25-ம் தேதி பிற்பகலில் காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே புதுவைக்கு அருகே கரையைக் கடக்கக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

25 ம் தேதி புயல் கரையைக் கடக்கும்போது காற்று மணிக்கு 100லிருந்து 110 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதன் காரணமாக, நவ.24 மற்றும் 25 தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழக வட கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புயலால் மக்கள் எந்த வகையிலும் பாதிக்க கூடாது என்ற அடிப்படையில் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தொடர்ந்து எடுத்துவருகிறது.மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கடலோர மாவட்டங்களில் பாதிப்பு அதிக அளவில் இருக்கும் என்பதால் கூடுதலாக முகாம்கள் மருத்துவ வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த புயல் கரையைக் கடக்கும்போது எடுக்கப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி  ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் பி.தங்கமணி, டி.ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் க.சண்முகம், டிஜிபி திரிபாதி, ஊராட்சித்துறை கூடுதல் செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலர் ஹர்மந்தர் சிங், பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மைச் செயலர் அதுல்யா மிஸ்ரா, உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர், வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, உணவுத்துறை கூடுதல் தலைமைச் செயலர் தயானந்த கட்டாரியா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் போது அனைவரும் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.