சிறப்பு செய்திகள்

விடியா தி.மு.க. ஆட்சியில் குற்ற செயல்கள் அதிகரிப்பு-முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

சென்னை,

ஆட்சிக்கு வந்த 8 மாதத்தில் 550 கொலைகள் நடைபெற்றுள்ளது என்றும், தி.மு.க. ஆட்சியில் குற்றங்கள் அதிகரித்து விட்டது என்றும் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
திருவொற்றியூரில் நடைபெற்ற தனியார் பள்ளி ஆண்டு விழாவில் வடசென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியை தனிப்படை அமைத்து தேடக்கூடிய அளவிற்கு அவர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை. அப்படியே தனிப்படை அமைத்து தேட வேண்டும் என்றால் தமிழகத்தில் பல ரவுடி குற்றவாளிகளை தேடி விட்டார்களா? ராஜேந்திர பாலாஜியை கைது செய்வதன் மூலம் கழகத்திற்கு களங்கம் ஏற்படுத்த பார்ப்பது தான் தி.மு.க. ஆட்சியின் நோக்கம்.

ராஜேந்திர பாலாஜி தொடர்பான வழக்கில் நீதிமன்றம் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இவரை சேர்ந்தவர்களையோ, உறவினர்களையோ விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக்கூடாது என்று நீதிமன்றம் தெளிவாக தெரிவித்துள்ளது.

மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்பை காலில் போட்டு மிதித்து விட்டு கழகத்தினரை கைது செய்கிறார்கள். ஜனநாயக நாட்டில் மக்கள் ஆட்சி நடைபெறுகிறதா? மன்னர் ஆட்சி நடைபெறுகிறதா? என்ற கேள்வி எழுகிறது. கழகத்தை சேர்ந்தவர் என்ற காரணத்திற்காக இப்படி செய்கிறார்கள். நீதிமன்றம் வழக்கறிஞர் வீட்டிற்கு சென்றது தவறு என்று கூறியிருக்கிறது. வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் இப்படி தனிப்படையை வைத்து கைது செய்திருக்கிறார்கள்.

அவர்களுக்கு வேண்டப்பட்டவர்கள் என்றால் ஒரு அளவுகோல். தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கை இவர்கள் கவனிக்கவில்லை. தினந்தோறும் கொலை, கொள்ளை நடக்கிறது. சமீபத்தில் செங்கல்பட்டில் இரட்டை கொலை நடந்துள்ளது.

இன்னொரு வெட்கக்கேடான விஷயம். தி.மு.க. அரசு பொறுப்பேற்ற இந்த 8 மாதத்தில் 550 கொலைகள் நடந்துள்ளன. வாக்களித்த மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தருவதாக சொன்னார்கள். செய்தார்களா? எதுவும் செய்யவில்லை. பொங்கல் பரிசு தொகுப்பு முழுமையாக வழங்கவில்லை.

குறிப்பிட்ட பொருட்கள் மட்டும் தான் வழங்கப்படுகிறது. அந்த காலத்தில் மன்னர்கள் செல்வதுபோல ரேஷன் கடைகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மாறுவேடத்தில் போக வேண்டும். அப்போதுதான் மக்கள் என்ன பேசுகிறார்கள் என்று உங்கள் காதில் கேட்கும். நாங்கள் பொங்கலுக்கு ரூ.2.500 தந்தோம். நீங்கள் ரூ.5 ஆயிரம் கொடுங்கள்.

தி.மு.க. அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தமிழகத்திலிருந்து விலக்கப்படும் என்று கூறிய நிலையில் தற்போது அதை மறந்து செயல்படுகின்றனர். ஆளுநர் அலுவலகத்திலும், உள்துறை அமைச்சர்
அலுவலகத்திலும் மனு அளித்துவிட்டு வந்து வீட்டீர்கள். எதனை உருப்படியாக செய்தீர்கள். எல்லாமே ஏமாற்று வேலை தான். அனைத்துக் கட்சி கூட்டம் என்பது தி.மு.க.வின் இரட்டை வேடம் தான். அரசு ஒருபுறம் சட்ட ரீதியான நடவடிக்கைகளையும், மறு புறம் மாணவர்களுக்கான நீட் தேர்வு பயிற்சி நிலையங்களையும் ஒரே நேரத்தில் செயல்படுத்த வேண்டும். மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான விலைகளை குறைத்த போதிலும் மாநில அரசு இன்னும் ஏன் குறைக்கவில்லை.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.