தற்போதைய செய்திகள்

தோவாளை – தடிக்காரன்கோணம் ஊராட்சியில் தடையின்றி சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை – என்.தளவாய் சுந்தரம் உத்தரவு

கன்னியாகுமரி

தோவாளை – தடிக்காரன்கோணம் ஊராட்சியில் தடையின்றி சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், தடிக்காரன்கோணம், அழகியபாண்டியபுரம் கூட்டுகுடிநீர் திட்டத்தின் கீழ், கட்டப்பட்டுள்ள நீரேற்று நிலையத்தினை தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அழகியபாண்டியபுரம் கூட்டுகுடிநீர் திட்டத்தின்கீழ், தோவாளை ஊராட்சி ஒன்றியம், தடிக்காரன் ஊராட்சி பகுதிக்கு குடிநீர் வழங்கிட, தடிக்காரன்கோணம் கிராம ஊராட்சி அலுவலக வளாகத்தில் 1.70 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி மற்றும் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்நீர்த்தேக்க தொட்டியின் மேல் ஏறி நீர்த்தேக்க அளவினை, பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

இத்தொட்டியிலிருந்து, அப்பகுதிகளிலுள்ள 6 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் வாயிலாக சுமார் 5000 பொதுமக்களுக்கு தினசரி நபர் ஒன்றுக்கு தலா 40 லிட்டர் வீதம் குடிநீர் வழங்கப்படவுள்ளது. மேலும், அப்பகுதிக்குட்பட்ட குட்டிப்பொத்தை பகுதிக்கு குடிநீர் சரியாக வழங்கப்பட வேண்டும் என்ற அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று, அதிக குதிரைதிறன் கொண்ட மோட்டார்கள் வாயிலாக நீரேற்றம் செய்து, தடையின்றி சீரான முறையில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுக்கு, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம் அறிவுறுத்தினார்.

மேலும், ஊராட்சிக்கு சொந்தமான உழவர் தினசரி சந்தைக்கு சென்று, ரூ.7 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேற்கூரையினை ஆய்வு செய்து, பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து, அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில், 30 படுக்கைகள் மற்றும் அறுவை சிகிச்சை அரங்க கூடத்தினை, பார்வையிட்டு, ஆய்வு செய்தார். மேலும், சுகாதார நிலையத்திலுள்ள படுக்கைகள் சுத்தமாக உள்ளதா எனவும், கேட்டறிந்து, நோயாளிகளின் சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் போதுமான அளவு இருப்பில் வைத்துக் கொள்ள வேண்டுமெனவும், மருத்துவ அலுவலர்களுக்கு, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம் அறிவுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து, அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம், ராமபுரம் ஊராட்சிக்குட்பட்ட, சமத்துவபுரத்திலுள்ள 150 ஏழை, எளிய பொதுமக்களுக்கு தலா 5 கிலோ அரிசியினை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய பெருந்தலைவர் .எஸ்.கிருஷ்ணகுமார், ஊராட்சி ஒன்றியத்தலைவர்கள் இ.சாந்தினி பகவதியப்பன், எஸ்.அழகேசன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் மா.பரமேஸ்வரன், ஈ.நீலப்பெருமாள், தோவாளை ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் எம்.டி.என்.ஷேக், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் தா.மேரி ஜாய், ராமபுரம் ஊராட்சி வார்டு உறுப்பினர் சொர்ணம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் கதிரேசன், உதவி செயற்பொறியாளர் சங்கர், ராமபுரம் ஊராட்சி செயலாளர் செல்லப்பெருமாள், லதா ராமசந்திரன், ஏசுதாஸ், சுகுமாரன், ஜெசீம், ஐ.குமார், வீரபுத்திரன், ஸ்ரீனிவாசன், லெட்சுமி ஸ்ரீனிவாசன், இராஜபாண்டியன், மனோகரன், சுடலை மற்றும் பலர் உடனிருந்தனர்.