சிறப்பு செய்திகள்

பொங்கல் பண்டிகைக்கு உச்சநீதிமன்றம் விடுமுறை – முதலமைச்சர் வரவேற்பு

சென்னை

பொங்கல் பண்டிகைக்கு உச்சநீதிமன்றம் விடுமுறை அளித்துள்ளதை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வரவேற்றுள்ளார்.

தமிழகத்தில் தைப்பொங்கல் பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டப்படுவது வழக்கம். அனைத்து தரப்பு மக்களும் புத்தாடை அணித்து பொங்கலோ பொங்கல் என்று இயற்கை அன்னையை அன்புடன் வரவேற்பார்கள். இந்த பண்டிகைக்கு தற்போது உச்சநீதிமன்றமும் விடுமுறை அளித்துள்ளது.

இதுதொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“உழுவார் உலகத்தார்க்கு ஆணி” என்று திருவள்ளுவரால் உயர்வாய் உரைக்கப்பெற்ற உழவர்களின் பெருநாளாம் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு வரும் 2021 ஜனவரி, 14 மற்றும் 15ம்தேதிகளில் உச்சநீதிமன்றத்திற்கு விடுமுறை அளிக்கப்படும் என்ற உச்ச நீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த அறிவிப்பினை மனதார வரவேற்கிறேன்.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நீதிமன்றங்களில் தமிழை வழக்காடும் மொழியாக அறிவிக்க தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அம்மாவின் வழியில் செயல்படும் எனது தலைமையிலான அரசும் தொடர்ந்து இக்கோரிக்கையினை வலியுறுத்தி வருகின்றது.

தமிழரின் பண்பாடு, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் அறுவடைத் திருநாளாம் தைப்பொங்கல் நன்னாளின் சிறப்பினை அனைவரும் அறியும் வண்ணம் உச்சநீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவித்த உச்சநீதிமன்றத்திற்கு இத்தருணத்தில் என் சார்பாகவும், தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த அறிவிப்பு தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகைக்கு உச்சநீதிமன்றம் விடுமுறை அளித்ததை தமிழ்நாட்டு மக்கள் சார்பாக மனமார வரவேற்கிறேன் என்று தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.