தற்போதைய செய்திகள்

பள்ளிகளை திறக்க பரிசீலித்து முடிவு – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

ஈரோடு

இக்கட்டான சூழ்நிலை தொடர்ந்து நீடிப்பதால் பள்ளிகளை திறக்க பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாகதேவம்பாளையம், வெள்ளாங்கோவில், சிறுவலூர், மொடச்சூர், அயலூர், கோட்டுப்புள்ளாம்பாளையம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ரூ.6.42 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை பூமிபூஜையிட்டு துவக்கி வைத்தும், முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்தும் வைத்தார்.

பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நிவர் புயல் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும் என அறியப்பட்ட நிலையில் முதலமைச்சரின் சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், பாதிப்புகள் தடுக்கப்பட்டுள்ளது. இயற்கை மாற்றங்கள் ஏற்பட்டாலும் அதற்கான நடவடிக்கைகளை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மேற்கொண்டுள்ளார். மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்யவும், மேலும் அவர்களின் சந்தேகங்களை தீர்த்து வைக்கவும் ஒவ்வொரு பாடத்திற்கும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் காலை 8 மணி முதல் மாலை 6 வரை மாணவர்களின் சந்தேகங்கள் தீர்க்கப்பட்டு வருகிறது.

தனியார் நிறுவனங்கள் மூலமாகவும் மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்பொழுது இருக்கின்ற நிலை மிகவும் இக்கட்டான சூழ்நிலை என்பதால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் வேண்டுகளின்படி முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பரிசீலனை செய்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுப்பார்.

மாணவர்களுக்கு ரூ.1.12 கோடி மதிப்பீட்டில் நூலகங்கள் வழங்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு செல்லாத குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறும். 17,840 மாணவர்கள் இணையதளம் மூலம் நீட் தேர்விற்கு பயிற்சி பெற்று வருகின்றனர். மருத்துவப் படிப்பில் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டு என்ற அடிப்படையில், மாணவர்கள் எந்த மருத்துவ கல்லூரியில் சேர்ந்து பயின்றாலும் அவர்களுடைய கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணத்தை அரசே ஏற்கும். தமிழ்நாடு மின்வெட்டு இல்லாத மாநிலமாக உள்ளது. கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி, மொடச்சூர் பகுதியில் குளம் விரைவில் நிரப்பப்படவுள்ளது. மேலும் குழந்தைகள் மகிழ்ச்சியாக செல்ல 2 படகுகள் தயார் நிலையில் உள்ளது.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், நம்பியூர் ஒன்றிய கழக செயலாளர் தம்பி (எ) கே.ஏ.சுப்பிரமணியம், கோபி ஊராட்சி ஒன்றிய தலைவர் கே.பி.மவுதீஸ்வரன், கோபி வருவாய் கோட்டாட்சியர் சி.ஜெயராமன், மொடச்சூர் சந்திரசேகர், கவுன்சிலர் வேல்முருகன், சிறுவலூர் முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் அண்ணாதுரை, கோபி நகர செயலாளர் பி.கே.காளியப்பன், கோபி நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஏ.என்.முத்து ரமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.