தற்போதைய செய்திகள்

தரங்கம்பாடியில் துறைமுகம் அமைக்கும் பணி விறுவிறுப்பு – அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தகவல்

நாகப்பட்டினம்

தரங்கம்பாடியில் துறைமுகம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடியில் கட்டப்பட்டு வரும் துறைமுகத்தை கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரவீன்.பி.நாயர், சிறப்பு அலுவலர் (மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கம்) ரா.லலிதா ஆகியோர் முன்னிலையில் பார்வையிட்டார்.

பின்னர் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

தரங்கம்பாடி சரித்திர பெயர் பெற்ற துறைமுகம் என்பதற்கு இங்குள்ள டச்சுக்காரர்கள் கோட்டையும், மாசிலாமணிநாதர் கோயிலும் சான்றாகும். உலகிலேயே ஓசோன் வாயு அதிகமாக உள்ள இடமாக தரங்கம்பாடி திகழ்கிறது. இங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் மீன்பிடித் தொழிலை தங்களுடைய முக்கிய தொழிலாக கொண்டுள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலையால் இக்கிராமம் வெகுவாக பாதிக்கப்பட்டதுடன், இங்குள்ள மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது. தற்போது இக்கிராமத்தில் 748 சிறிய மீன்பிடி கலன்களும், 186 விசைப்படகுகளும் உள்ளது. இங்குள்ள மக்கள் தங்களுடைய மீன்பிடிப்படகுகளை நிறுத்துவதற்கு போதுமான துறைமுக வசதியின்றி அல்லல்படுகின்றனர்.

இக்கிராமத்தில் வசிக்கும் மீனவ மக்களின் இன்னல்களை நிவர்த்தி செய்யும் எண்ணத்தோடு தரங்கம்பாடி கிராமத்தில் மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான சாத்திய கூறுகளை ஆராய்ந்து விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு ரூ.120 கோடிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. பிரதான அலை தடுப்புச்சுவர் 1060 மீட்டர், சிறிய அலை தடுப்புச்சுவர் 330 மீட்டர், படகு அனையும் துறை 340 மீட்டர், மீன் ஏலக்கூடம், வலை பின்னும் கூடம், மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி, அலுவலக கட்டடம், சாலை வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் அடங்கியவை ஆகும்.

இத்துறைமுகத்தினால் சின்னமேடு, சின்னங்குடி, தாழம்பேட்டை, புதுப்பேட்டை, பெருமாள்பேட்டை, வெள்ளக்கோவில், குட்டியான்டியூர், தரங்கம்பாடி, சந்திரபாடி, சின்னூர்பேட்டை ஆகிய கிராம மக்கள் பயனடைவர். தரங்கம்பாடியில் கடந்த 09.09.2019 அன்று மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமாரால் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.