மற்றவை

சேவை செய்யும் நோக்கத்தில் ஸ்டாலின் புயல் பாதிப்புகளை பார்வையிடவில்லை – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி

விருதுநகர்

ஸ்டாலின் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிடவில்லை என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் சேவையை பால்வளத்துறை அமைச்சர் கே.டி ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார். பின்னர் கண் சிகிச்சைப் பிரிவில் குத்துவிளக்கு ஏற்றி பின்னர் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள், அளிக்கப்படும் சிகிச்சை முறைகளைப் பற்றியும் மருத்துவ அலுவலரிடம் கேட்டறிந்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கண்ணன்,சுகாதாரத்துறை இணை இயக்குனர் மனோகரன், துணை இயக்குனர் ராம் கணேஷ், தலைமை மருத்துவர் பாபுஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நிவர் புயல் தாக்குதலின்போது பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு கொட்டும் மழையிலும் மக்களை பாதுகாக்கும் முதலமைச்சராக எடப்பாடி கே.பழனிசாமி உள்ளார். ஆவின் பால் புயல் பாதித்த பகுதிக்கு தங்கு தடையின்றி கிடைத்துள்ளது. பால் இல்லை என்ற பிரச்சினையே இல்லாமல் தங்கு தடையின்றி புயல் பாதித்த பகுதியில் கொடுத்து வருகிறோம். புயலை பொறுத்தமட்டில் வரும் முன் காப்போம் என்ற முறையில் எடப்பாடியார் எடுத்திருக்கும் நடவடிக்கையை அனைவரும் பாராட்டுகிறார்கள்.

ஸ்டாலின் பாதுகாப்பு கவசம் அணிந்து புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தார். ஸ்டாலின் வேறு வழியின்றி முதல்வரை பார்த்து சம்பவ இடத்தைப் பார்வையிடுகிறார். பிறரைப் பார்த்து வரக்கூடிய தலைவர் அது சேவை கிடையாது. தானாக சேவை செய்ய வர வேண்டும். ஸ்டாலின் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் புயல் பாதித்த பகுதியை பார்வையிடவில்லை. தேர்தல் வரும் என்பதால் தேவை என்பதை கருத்தில் கொண்டு பார்வையிட்டுள்ளார். ஏழை எளிய மக்களுக்காக இருக்கக்கூடிய ஒரே ஆட்சியாக எடப்பாடியார் ஆட்சி உள்ளது. இந்த ஆட்சியின் சிறப்புகளை மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.

நிகழ்ச்சியில் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் கிருஷ்ணராஜ், நகர கழக செயலாளர் பாஸ்கர்ராஜ், அம்மா பேரவை செயலாளர் துரைமுருகேசன், கூட்டுறவு பால் சங்க தலைவர் வனராஜ், அவைத் தலைவர் பரமசிவம், பூபதி ராஜா வங்கித் தலைவர் ராதாகிருஷ்ணராஜா, கழக பிரமுகர் சொக்கநாதன்புத்தூர் நவரத்தினம், சேத்தூர் நகர செயலாளர் பொன்ராஜ், முன்னாள் கவுன்சிலர் பால் டிப்போ கதிரேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.