தற்போதைய செய்திகள்

10,000 கேங்மேன் பணியிடங்கள் விரைவில் நிரப்ப நடவடிக்கை – அமைச்சர் பி.தங்கமணி தகவல்

நாமக்கல்

மின்வாரியத்தில் 10 ஆயிரம் கேங்மேன் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை ேமற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அருகே அம்மா இ-சேவை மையத்தை கழக அமைப்பு செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணி திறந்து வைத்து, 15 பயனாளிகளுக்கு தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை அமைப்பு சாரா தொழிலாளர் அடையாள அட்டைகளையும், முதியோர் உதவித் தொகைக்கான ஆணைகளையும் வழங்கினார். பின்னர் திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி கழக அலுவலகத்தை திறந்து வைத்த அவர் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிதாக கட்டப்பட்ட அலுவலகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அமைச்சர் பி.தங்கமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நிவர் புயலின்போது முதலமைச்சரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுத்ததின் காரணமாக விபத்தில்லாத நிகழ்வுகளை சந்தித்துள்ளோம். முதலமைச்சர் அறிவுரைக்கு இணங்க சென்னை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் விரைந்து மீட்பு நடவடிக்கை எடுத்துள்ளோம். விழுப்புரம், கடலூர், மாவட்டங்களில் புயல் தாக்கிய 24 மணி நேரத்திற்குள் வீடுகளுக்கு 100 சதவீதம் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை 95 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு சில குடியிருப்புப் பகுதிகளில் மின்சீரமைப்பு பணிகள் நடந்து, இன்று இரவுக்குள் முழுமையாக மின்வினியோகம் வழங்கப்பட்டு விடும்.

நிவர் புயலை விட வேகமாக தமிழக அரசு செயல்பட்டு பணிகளை மேற்கொண்டுள்ளது. நிவர் புயலால் சென்னை, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மொத்தம் 2488 மின் கம்பங்கள் சேதமடைந்தும், மின்னல் தாக்கியதால் 108 மின்மாற்றிகள் பாதிக்கப்பட்டும் உள்ளன. அவற்றை சீரமைத்து புதிய மின்கம்பங்கள் அமைத்து வருகிறோம். உடனடியாக மின்சாரம் வழங்க, கடலூர், விழுப்புரம் முழுமையாக மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. சென்னை இன்று இரவுக்குள் வழங்கப்பட்டுவிடும்.

மின்வாரியத்திற்கு புயல் தாகத்தால் ரூ.15 கோடி மதிப்பிலான சேதம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தின் பெரு நகரங்களில் வெள்ளம் போன்ற காலங்களில் மின் பாதிப்பு ஏற்படாமல் இருக்க புதைவட மின் கம்பிகள் அதிகப்படியாக அமைக்கப்பட்டு வருகிறது. சென்னையில், பெரும்பாக்கம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை பகுதிகளில் மழை வெள்ள நீர் அதிகம் சூழ்ந்துள்ளதால், அந்தப் பகுதிகளிலும் எதிர்காலத்தில் மின் பாதிப்பு ஏற்படாமல் இருக்க முழுமையாக புதை வட மின்கம்பிகள் அமைக்கப்படும். வட சென்னை பகுதிகளில் புதைவட மின் கம்பிகள் அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. நிவர் புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தமிழக முதலமைச்சர் மத்திய அரசுக்கு விவரங்களை எடுத்துரைப்பார். அதன்பின்னர் நிவாரணம் கோரப்படும்.

மின்வாரியத்தில் 10 ஆயிரம் கேங் மேன் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுத்துள்ளோம். இதுதொடர்பாக மின் சங்கங்கள் தொடுத்த வழக்கு முடிந்தவுடன், 10 ஆயிரம் பேருக்கு நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்குவார். அரசு வழக்கறிஞரிடம் கூறி, வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் கா.மெகராஜ், கழக பொதுக்குழு உறுப்பினரும், திருச்செங்கோடு தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினருமான பொன்.சரஸ்வதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.