ஏழைகளின் கனவுத் திட்டத்தை நிறைவேற்றியவர் எடப்பாடியார் – அமைச்சர் கே.டி.ராஜேந்திபாலாஜி புகழாரம்
விருதுநகர்
தமிழகம் முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக்குகளை திறந்து வைத்து ஏழைகளின் கனவு திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நிறைவேற்றியுள்ளார் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திபாலாஜி பேசினார்.
விருதுநகர் மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறையின் மூலம் இரண்டாம் கட்டமாக 3 வட்டங்களில் முதலமைச்சரின் “அம்மா மினி கிளினிக்குகள்” திறப்பு விழா நடைபெற்றத. இந்நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திபாலாஜி கலந்துகொண்டு முதலமைச்சரின் “அம்மா மினி கிளினிக்குகளை” திறந்து வைத்து பேசியதாவது:-
மக்களின் முன்னேற்றத்திற்காக செயல்படுபவர் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி. முன்பெல்லாம் கிராம பகுதிகளிலுள்ள அடித்தட்டு மக்கள் உடல்நிலைப் பாதிப்பு காலங்களில் மருத்துவத்திற்கு நகரத்தை நோக்கி வரும் சூழ்நிலை இருந்து வந்தது. அதை மாற்றி வட்டார அளவில் அரசு மருத்துவமனைகள் செயல்பட்டன. அதன் கட்டுப்பாட்டில் ஒவ்வொரு ஊராட்சியிலும் துணை சுகாதார நிலையம் செவிலியர்கள் தலைமையில் இயங்கி வந்தது.
இந்த இரண்டு அடுக்கு நிலையில் பொதுமக்கள் தங்களின் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான மருத்துவ உதவிகளை பயன்படுத்தி வந்த நிலையில் பொதுமக்களுக்கு தடையின்றி மருத்துவத்தை வழங்க உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையில் வட்டார மருத்துவமனைக்கும், துணை சுகாதார நிலையத்திற்கும் இடைப்பட்ட நிலையாக “அம்மா மினி கிளினிக்குகள்” துவக்க முதலமைச்சர் உத்தரவிட்டு, முதற்கட்டமாக தமிழகத்தில் 2000 “அம்மா மினி கிளினிக்குகள்” செயல்படும் வகையில் இத்திட்டத்தை முதலமைச்சர் துவக்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 20 இடங்களில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகள் திறந்து வைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதனைத்தொடர்ந்து விருதுநகர் வட்டத்திற்குட்பட்ட சங்கரலிங்கபுரம், வி.ராமலிங்கபுரம் ஆகிய 2 இடங்களிலும், அருப்புக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட குருந்தமடம், செட்டிகுறிச்சி, அருப்புக்கோட்டை 3-வது வார்டு ஆகிய 3 இடங்களிலும், திருச்சுழி வட்டத்திற்குட்பட்ட வெள்ளையாபுரம் என மொத்தம் 6 இடங்களில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள “அம்மா மினி கிளினிக்குகள்” படிப்படியாக துவக்கி வைக்கப்படும். இந்த அம்மா மினி கிளினிக்கில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் என 3 பேர்கள் பணியாற்றுவார்கள். இந்த அரசு மருத்துவமனை ஒவ்வொரு கடைக்கோடி கிராமத்திலும் செயல்படும்.
இனி அந்தந்த கிராமங்கள் மட்டுமன்றி அதனைச்சுற்றியுள்ள கிராம மக்களும் சிறியவர் முதல் பெரியவர் வரை தேவையான அவசர சிகிச்சை மற்றும் உடல் பரிசோதனை என அனைத்து வகை சிகிச்சைகளும் பெற்று பயன்பெறும் வகையில் அனைத்து மருத்துவ உபகரணங்கள், மருந்து மாத்திரைகள், ஊசி மருந்துகள் என போதிய அளவு இருப்புடன் இந்த அம்மா மினி கிளினிக்குகள் செயல்படும். பொதுமக்கள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், கிராமப்பகுதிகளுக்கு முதலமைச்சர் உத்தரவின்படி அம்மா மினி கிளினிக்குகள் திறக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
பொதுமக்களின் நலன் கருதி கடந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு ரூ.1,000 வழங்கப்பட்டது. இந்த ஆண்டிற்கு அனைத்து அரிசி குடும்பஅட்டைதாரர்கள் மற்றும் முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கம் ரூ.2,500 வழங்க முதலமைச்சரால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுமட்டுமன்றி விரைவில் இன்னும் எண்ணற்ற திட்டங்களை முதலமைச்சர் அறிவிக்க உள்ளார். பொதுவாக, பொதுமக்கள் எவ்வித கஷ்டமின்றி வாழவேண்டும் என்பதே அம்மா அரசின் எண்ணமாகும். பொதுமக்களாகிய உங்கள் நலனில் எந்தஅளவிற்கு முதலமைச்சர் அக்கறை செலுத்துகிறாரே அந்த அளவிற்கு நீங்களும் முதலமைச்சருக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திபாலாஜி பேசினார்.
இதனைத்தொடர்ந்து, பொதுமக்களுக்கு அளிக்கப்படுகின்ற பரிசோதனைகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப்பணிகள் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையங்கள் மூலம் ஊட்டச்சத்து இணை உணவுகளின் அவசியம் குறித்தும், கர்ப்ப காலங்களில் கர்ப்பிணிப் பெண்களுக்கு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்தும் அமைக்கப்பட்ட விழிப்புணர்வு கண்காட்சியை பார்வையிட்டு, 7 கர்ப்பிணி பெண்களுக்கு அம்மா தாய்சேய் நல ஊட்டச்சத்து பெட்டகங்களையும், டாக்டர். முத்துலெட்சுமி மகப்பேறு நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 12 கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணையையும் அமைச்சர் கே.டி.ராஜேந்திபாலாஜி வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகளில் சுகாதார பணிகள் துணை இயக்குநர் பழனிச்சாமி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.