தற்போதைய செய்திகள்

விவசாயிகளுக்கு விரைவில் இழப்பீடு – அமைச்சர் கே.சி.வீரமணி உறுதி

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 5 ஹெக்டேரில் பயிர்கள் சேதமடைந்துள்ளது என்றும், விவசாயிகளுக்கு விரைவில் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நிவர் புயலின் தாக்கத்தால் ஆம்பூர் வட்டத்தில் அதிகப்படியான மழைபொழிவு இருந்தது. இதனால் கானாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலாற்றில் வெள்ளம் சென்று கொண்டுள்ளது. ஆம்பூர் நகராட்சி பகுதிகளில் கானாறு மற்றும் பாலாறு கரையோரம் உள்ள பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு 16 முகாம்களில் 123 குடும்பங்களை சார்ந்த 792 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இக்குடும்பங்களுக்கு வருவாய்த்துறையின் சார்பாக 10 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு மற்றும் 1 லிட்டர் எண்ணெய் அடங்கிய தொகுப்புகளையும், வீடுகள் சேதமடைந்த 4 பயனாளிகளுக்கு பேரிடர் மேலாண்மை நிதியின் கீழ் உடனடி நிவாரண உதவித்தொகை ரூ.5 ஆயிரத்திற்கான காசோலையினையும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.

முன்னதாக ஆம்பூர் நகராட்சி வார்டு 6 சிவராஐபுரம் பகுதியில் கானாற்றில் வெள்ள நீர் தடைப்பட்டு பாதிப்படைந்ததால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வெள்ளம் செல்ல வழி செய்துள்ளதை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆக்கிரமிப்பு குடியிருப்புகளுக்கு மாற்று இடம் வழங்கி நீர் வழித்தடம் சீரமைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

பின்னர் அமைச்சர் கே.சி.வீரமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் தாக்கிய நிவர் புயல் பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாத்திட முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைளை தீவிரமாக மேற்கொள்ள முதலமைச்சர் உத்திரவிட்டதன் பெயரில் திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகப்படியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டு பாதிப்புகள் குறைக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 20 வீடுகள் சேதமடைந்து இழப்பீடுகள் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது.

கால்நடை இழப்பு 1, மரங்கள் 17 முறிந்து விழுந்துள்ளது அகற்றப்பட்டுள்ளது. 18 மின்கம்பங்கள் சேதமைந்துள்ளவை மாற்றப்பட்டுள்ளது. சுமார் 5 ஹெக்டேர் பரப்பளவில் வாழை, சுரக்காய், நெல் பயிற்கள் சேதமடைந்துள்ளது. இவற்றிற்கான இழப்பீடு அரசு மூலம் விரைவில் வழங்கப்படும். மாவட்ட முழுவதும் 20 தற்காலிக முகாம்களில் சுமார் 882 நபர்கள் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த சாலைகள் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மனித உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலும் ஆம்பூர் வட்டத்தில் பாதிப்புகள் உள்ளது. பொதுமக்கள் குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆற்றில் செல்லும் வெள்ளத்தை பார்வையிடும்போதும், தேவையில்லாமல் குளிப்பதையும் தவிர்த்து தேவையற்ற உயிரிழப்பை தடுக்க பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

பாரத பிரதமர் அவர்கள் தமிழக அரசின் சிறப்பான செயல்பாடுகளை வெகுவாக பாராட்டியுள்ளார். குறிப்பாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக முதலமைச்சர் தலைமையில் செயல்பட்டு வருகின்றது என்று பாராட்டியுள்ளார். அந்த வகையில் அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. நிவர் புயலையும் சிறப்பான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் வெள்ள பாதிப்பு குறைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொ.விஜயகுமார், வருவாய் கோட்டாட்சியர் காயத்திரி சுப்பிரமணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சதீஷ்குமார், ஆம்பூர் சர்க்கரை ஆலைத்தலைவர் மதியழகன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் வெங்ககேடசன், அரசு வழக்கறிஞர் டில்லிபாபு, நகராட்சி ஆணையாளர் சவுந்திரராஐன், வட்டாட்சியர் பத்மநாபன், துணை காவல் கண்காணிப்பாளர் சச்சிதானந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.