தற்போதைய செய்திகள் மற்றவை

தி.மு.க.வின் பொய் பிரச்சாரத்தை முறியடித்து கழகத்தை மாபெரும் வெற்றிபெற செய்வோம்-பொள்ளாச்சி வி.ஜெயராமன் சூளுரை

ஈரோடு

தி.மு.க.வின் பொய் பிரச்சாரத்தை முறியடித்து கழகத்தின் மாபெரும் வெற்றி பெற செய்வோம் என்று சட்டப்பேரவை துணைத்தலைவைர் பொள்ளாச்சி வி.ெஜயராமன் சூளுரைத்தார்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகம் சார்பில் சென்னிமலை ஒன்றியக் கழகம், சென்னிமலை பேரூராட்சி கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு சென்னிமலை ஒன்றியக் கழக செயலாளர் ப.கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சிரகிரி முருகன் நெசவாளர்கூட்டுறவு சங்க தலைவர் ரவி (எ) இளங்கோவன் வரவேற்புரையாற்றினார். காங்கேயம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.எஸ்.என்.நடராஜ், மாவட்டக் கழக இணை செயலாளர் கே.வி.மணிமேகலை, மாவட்டக் கழக பொருளாளர் கிஷோர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசியதாவது:-

மக்களால் நான் மக்களுக்காக நான் என வாழ்நாளெல்லாம் தமிழக மக்களுக்கான திட்டங்களை வழங்கிய புரட்சித் தலைவி அம்மாவின் வழியில் கழகத்தையும், ஆட்சியையும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பாக வழிநடத்தி வருகிறார்கள். காங்கேயம் சட்டமன்ற தொகுதி கழகத்தின் எஃகு கோட்டை சென்னிமலை ஒன்றியம் எப்போதும் புரட்சி தலைவி அம்மாவிற்கு வலிமை சேர்த்து வந்துள்ளது.

திருப்பூர் மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பாக கந்த சஷ்டி பாடப்பெற்ற ஸ்தலமான சென்னிமலையில் தேர்தல் பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது. சென்னிமலை முருகன் அருளால் அனைத்து பணிகளும் சிறப்பாக நடைபெறும். காங்கேயம் தொகுதிக்குப் பட்டசென்னிமலை ஒன்றியம், பேரூராட்சிக்குட்பட்ட 65 பூத்களில் இளைஞர் பாசறை, மகளிர் அணி, கழகத்தினருடன் இணைந்து பூத் கமிட்டி அமைக்கப்பட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

ஒன்றியத்தில் 200 கிளைகளும், பேரூராட்சியில் 15 கிளைகளும் உள்ளன. தகவல் தொழில் நுட்ப பிரிவினர் அம்மா அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்து கூற வேண்டும். திமுகவின் பொய் பிரச்சாரங்களுக்கு சமூக வலைத்தளங்களில் தக்க பதிலடி தர வேண்டும். சட்டமன்றத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ‘எனக்கு பின்னாலும் ஆட்சியும், கட்சியும் தமிழக மக்களுக்கு சேவை செய்யும் கழகம் நூறாண்டுகள் வாழும் ‘என கூறினார். அம்மாவின் லட்சியங்களை நிறைவேற்ற நாம் பாடுபட வேண்டும். கழகத்தினர் அனைவரும் ஒற்றுமையுடன், ஒருங்கிணைந்து கழகப் பணியாற்ற வேண்டும். பொய்யான வாக்குறுதிகளை கூறி மக்களை ஏமாற்ற நினைக்கும் ஸ்டாலினின் திட்டம் தமிழக மக்களிடம் எடுபடாது.

செம்பரம்பாக்கம் ஏரி, கடலூர் போன்ற இடங்களில் வெள்ள தடுப்பு பணிகளை முதலமைச்சர் நேரில் பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார். விவசாயி நாட்டை ஆள்வதால் மக்களுக்கு தேவையான திட்டங்கள் எளிதில் கிடைக்கின்றன. 11 மருத்துவ கல்லூரிகள் தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. ஏழை எளிய அரசு பள்ளி மாணவ மாணவி மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படிக்க 7.5 சதம் இட ஒதுக்கீடு வழங்கி அவர்களது படிப்பு செலவையும் அரசே ஏற்கும் என முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.

குடிமராமத்து பணிகள் மூலம் ஏரி, குளங்கள் தூர் வாரப்பட்டு குடிநீர் பிரச்சினைகள் தீர்க்கப் பட்டுள்ளது. 2021-ம் ஆண்டில் மீண்டும் கழகத்திற்கு வாக்களிக்க மக்கள் தயாராகி விட்டார்கள். 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் கழகம் மாபெரும் வெற்றியடைவது உறுதி. அம்மாவின் அரசு மீண்டும் அமைய கழகத்தினர் பாடுபடவேண்டும்.

இவ்வாறு துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசினார்.