சிறப்பு செய்திகள்

சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் புயல் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாத்தோம் – முதலமைச்சர் பேச்சு

சென்னை

சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் புயல் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாத்தோம் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

தலைமைச் செயலகத்தில் நேற்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசியதாவது:-

அண்மையில் நிவர் புயல் ஏற்பட்டபோது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதலமைச்சர், மூத்த அமைச்சர்கள் , தலைமைச் செயலாளர் மற்றும் காவல் துறை தலைமை இயக்குநர் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு, புயல் ஏற்படும்போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டது.

மேலும், தலைமைச் செயலாளர் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் தொடர்பு கொண்டு அரசு அறிவித்த வழிமுறைகளை, அறிவுரைகளை தவறாமல் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியதன் விளைவாக நிவர் புயலால் தமிழகத்தில் பெரும் பொருட்சேதமோ, பெரும் உயிர் சேதமோ ஏதும் ஏற்படாமல் பாதுகாக்கப்பட்டது. சிறப்பான முறையில் நடவடிக்கைகள் எடுக்க உதவியாக இருந்த அமைச்சர்களுக்கும், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும், உயர் அதிகாரிகளுக்கும், மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்க விரும்புகின்றேன். சரியான முறையில், சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்த காரணத்தினால்தான், இன்றைக்கு தமிழகத்தில் எவ்வித பாதிப்பும் இல்லாமல் மக்கள் பாதுகாக்கப்பட்டனர் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை எல்லாம் அரசால் ஏற்படுத்தப்பட்ட முகாம்களில் தங்கவைத்து, அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்ததன் விளைவாக அங்கு வசிக்கின்ற மக்களுக்கு எவ்விதத்திலும் பாதிப்பு ஏற்படாமல் அரசு பார்த்துக் கொண்டது. அதேபோல, பாதிப்புக்குள்ளான பகுதிகளை நானும் நேரடியாகச் சென்று பார்த்தேன்.

துணை முதலமைச்சரும், உள்ளாட்சித் துறை அமைச்சரும், அந்தந்த மாவட்டத்திலிருக்கிற மாவட்ட அமைச்சர்களும் நேரடியாகச் சென்று மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தனர். அதோடு வருவாய்த் துறை அமைச்சர் , 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறையிலேயே தங்கி, அவ்வப்போது உள்ள நிலவரத்தை எடுத்துச் சொல்லி, மக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டுமென்று அறிவுரைகள் வழங்கிய காரணத்தால், இன்றைக்கு தமிழகத்தில் உயிர்சேதமும், பொருட்சேதமும் அதிக அளவில் ஏற்படாமல் பாதுகாத்துள்ளோம். இதற்கு உதவிய அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேவேளையில், தமிழகத்தில் புயல் தாக்குவதை அறிந்தவுடன், மத்திய உள்துறை அமைச்சர் தமிழகத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அளிப்பதாகவும், அதற்குத் தேவையான குழுக்களையும் அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்தார், அனுப்பியும் வைத்தார். நேற்றையதினம் இரவு 9 மணியளவில் (27-ந் தேதி இரவு) பாரதப் பிரதமர் நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து என்னிடம் கேட்டறிந்தார். அதோடு மத்திய அரசு, தேவையான உதவிகளையும் வழங்குமென்றும் தெரிவித்தார். ஆகவே, நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாரதப் பிரதமரும், உள்துறை அமைச்சரும் தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று அறிவித்தது நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

அதோடு, இந்தப் புயல் ஆந்திராவை நோக்கிச் செல்கின்ற போது, வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் அதிகமான மழைப் பொழிவு ஏற்பட்டது. அதோடு ஆந்திராவில் கனமழை பொழிந்ததன் விளைவாக, அங்கிருந்து பெண்ணையாறு, பாலாறு, -கௌடண்ய மகாநதி ஆகிய ஆறுகளின் வழியாக அதிக அளவில் தண்ணீர் வந்துகொண்டிருக்கின்றது. அதையும் அந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் சரியான முறையில் கையாண்டு, மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டதற்கும் அரசின் சார்பாக அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.