தற்போதைய செய்திகள்

1,724 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்

மதுரை

மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி வாடிப்பட்டி தாய் பள்ளியில் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் 1,724 பயனாளிகளுக்கு ரூ.1.84 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி வாடிப்பட்டி தாய் பள்ளியில், கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் த.அன்பழகன் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் முன்னிலையில், வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் 1,724 பயனாளிகளுக்கு ரூ.1.84 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசை தலைமை தாங்கி வழி நடத்துகின்ற முதலமைச்சர் பொறுப்பேற்ற நாள் முதலாக பல சீரிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். உலகத் தமிழர்களின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் பொங்கல் திருநாளன்று மகிழ்ச்சி பொங்க வேண்டும் என்பதற்காக கடந்த இரண்டு பொங்கலுக்கும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 கொடுத்தார். சாமானிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துகின்ற வகையில், மதங்களுக்கு அப்பாற்பட்டு உலகத்தமிழர்களால் கொண்டாடப்படும் பொங்கல் திருநாளுக்கு இம்முறை 2 கோடியே 6 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்கி இந்தியாவில் எந்தவொரு மாநிலத்திலும் நிகழ்த்திடாத சரித்திர சாதனையை முதலமைச்சர் நிகழ்தியுள்ளார்.

அரசியல் வரலாற்றில் சுதந்திரத்திற்கு முன்பும் சரி, சுதந்திரத்திற்கு பின்பும் சரி கிராமப்புற மக்களை நேசிக்கின்ற வகையில் ஒரே சமயத்தில் 2000 அம்மா மினி கிளினிக்குகளை தொடங்கிய சரித்திர சாதனையை முதலமைச்சர் நிகழ்த்தியுள்ளார். புரட்சித்தலைவி அம்மா அவர்கள், முதியோர் ஓய்வூதியம் வழங்க ரூ.4,200 கோடி ஒதுக்கினார். 35 லட்சம் ஆதரவற்ற முதியோர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர் கண்காணிப்பில் முதியோர் ஓய்வூதியம், ஆதரவற்ற விதவை உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் தகுதியுடைவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊராட்சி பகுதிகளில் ஆட்சேபனை இல்லாத அரசு நிலங்களில் வசிக்கும் மக்களுக்கே அவ்விடத்தை சொந்தமாக்கி இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. தற்பொழுது பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதியில் ஆட்சேபனை இல்லா அரசு நிலங்களில் வசிக்கும் மக்களுக்கே அவ்விடத்தை சொந்தாக்கி இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் வரலாற்று சிறப்புமிக்க ஆணையினை முதலமைச்சர் பிறப்பித்துள்ளார்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி, வருவாய் கோட்டாட்சியர் முருகானந்தம், கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குநர் ராஜதிலகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.