தமிழகம்

ஏழை மக்களின் பசியை போக்கியது அம்மா அரசு – முதலமைச்சர் பெருமிதம்

சென்னை

கொரோனா பாதிக்கப்பட்ட சோதனையான காலகட்டத்திலும் அம்மா உணவகங்கள் மூலம் மக்களின் பசியை போக்கிய அரசு அம்மாவின் அரசு என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசியதாவது:-

அம்மாவின் அரசால் பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் நியாய விலைக் கடைகளின் மூலமாக வழங்கப்பட்டதால், பொதுமக்கள் அந்தச் சிரமத்திலிருந்து மீட்கப்பட்டார்கள். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 1,000 வழங்கப்பட்டது. 17 அமைப்பு சாரா நல வாரிய தொழிலாளர்கள், 14 நல வாரிய தொழிலாளர்கள் மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள், என 35.65 லட்சம் தொழிலாளர்களுக்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 2000 ரூபாயும், 13.35 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு 1000 ரூபாயும் அம்மாவின் அரசால் வழங்கப்பட்டது.

கொரோனா வைரஸ் ஏற்பட்ட காலத்திலே, அம்மா உணவகத்தின் மூலமாக நாளொன்றுக்கு 8 லட்சம் பேருக்கு உணவு அளித்தோம். ஆகவே, அப்படி பாதிக்கப்பட்ட நேரத்தில் அம்மா உணவகத்தின் மூலமாக ஏழை மக்களுக்கு உணவு வழங்கி பசியை போக்கிய அரசு அம்மாவின் அரசு. அதற்காக அம்மா உணவகத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் அரசின் சார்பாக நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல, சமூக உணவுக் கூடங்கள் மூலமாகவும் நாங்கள் உணவு தயாரித்து வழங்கினோம். முதியவர்களுக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு, நோய்வாய்ப்பட்டவர்களுக்கு எல்லாம் வீடு தேடிச் சென்று உணவை வழங்கினோம். இப்படி ஒரு சோதனையான காலத்திலே அம்மாவுடைய அரசு மக்களுக்கு உதவிகரமாக இருந்தது என்பதை இந்த நேரத்தில் தெரிவிக்க விரும்புகின்றேன்.

இன்றையதினம், சென்னையில் நடமாடும் அம்மா உணவகம் ஏற்படுத்தப்பட்டு, ஏழை எளிய மக்கள் எங்கெங்கு எல்லாம் இருக்கிறார்களோ, அந்தப் பகுதிகளுக்கே சென்று உணவு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதற்காக 3 வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன என்ற செய்தியை இந்த நேரத்திலே தெரிவிக்க விரும்புகின்றேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.