தமிழகம்

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ள பிரதமருக்கு முதலமைச்சர் நன்றி

சென்னை

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ள பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில் நேற்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசியதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலத்திற்கும் அமைச்சர்கள், சிறப்பு அதிகாரிகள், கூடுதலாக களப் பணியாளர்கள் நியமித்தது, காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடத்தியது, ஏழை மக்கள் வாழும் பகுதிகளில் மறுமுறை உபயோகிக்கத்தக்க முகக்கவசங்கள் வழங்கியது, அப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு தனிமைப்படுத்தும் வசதி இல்லாதிருந்தால், அவர்களுக்கு அவ்வசதியை அரசு மையங்களில் ஏற்படுத்தி, 1000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கியது, தேவையான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியது போன்ற பணிகள் அம்மாவின் அரசால் மேற்கொள்ளப்பட்டன.

கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி, திருமழிசைக்கு மாற்றப்பட்டு, இந்நோய்ப் பரவல் படிப்படியாகக் குறைந்தவுடன் மீண்டும் கோயம்பேட்டிலேயே செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. பாரதப் பிரதமர் காணொலிக் காட்சி மூலமாக தமிழகத்தில் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகளை கேட்டறிந்ததோடு, பாரதப் பிரதமர் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் சிறந்த முறையில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவல் தடுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளது என்றும் பாராட்டினார். அதுமட்டுமல்லாமல், மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடு ஒரு முன்னோடியாகத் திகழ்கிறது என்ற செய்தியையும் தெரிவித்தார். அதற்காக பாரதப் பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.