தற்போதைய செய்திகள்

தமிழ்நாட்டில் 1500 நபர்களுக்கும் குறைவாக கொரோனா தொற்று – முதலமைச்சர் தகவல்

சென்னை

தமிழ்நாட்டில் 1500 நபர்களுக்கும ்குறைவாக கொரோனா தொற்று இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

தலைமைச் செயலகத்தில் நேற்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசியதாவது:-

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து 6-வது முறையாக தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. அதற்கான விருதையும் நாம் பெற்றிருக்கின்றோம். இதற்காக நம்முடைய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருக்கும், இந்த துறையைச் சேர்ந்த செயலாளர் , அவர்களோடு இணைந்து பணியாற்றிய அனைத்து மருத்துவர்களுக்கும், மருத்துவ துறையை சேர்ந்த அலுவலர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுதல்களையும், நன்றியையும் இந்த நேரத்திலே தெரிவிக்க விரும்புகின்றேன்.

தேசிய அளவில் நீர் மேலாண்மை பணியில் தமிழ்நாடு அரசு சிறந்து விளங்கியதற்காக மத்திய அரசு தேசிய விருதை நமக்கு வழங்கியிருக்கிறது. ஆகவே, தேசிய அளவிலே நீர் மேலாண்மை திட்டத்தில் முதன்மை வகிப்பதும் தமிழ்நாடு அரசு என்பதை இந்த நேரத்திலே தெரிவிக்க விரும்புகின்றேன். அதற்காக பாடுபட்ட பொதுப்பணித் துறை செயலாளருக்கும், அவரோடு இணைந்து பணியாற்றிய பொறியாளர்களுக்கும், அத்துறையில் பணியாற்றும் அனைத்து அரசு பணியாளர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுதல்களையும், நன்றியையும் இந்த நேரத்திலே தெரிவிக்க விரும்புகின்றேன்.

அம்மாவுடைய அரசை பொறுத்தவரைக்கும், கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக நாம் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக இன்றைக்கு தொற்று பரவல் படிப்படியாக குறைந்து, கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்கின்றோம். இப்பொழுது 1500 நபர்களுக்கும் குறைவாக நோய் தொற்று ஏற்பட்டவர்களுடைய நிலையை நாம் பார்க்கின்றோம். இறப்பவர்களுடைய சதவிகிதம் மிக மிக குறைவாக இருக்கின்றது. ஆக, இப்படி அம்மாவுடைய அரசு எடுத்த நடவடிக்கைக்கு பக்கபலமாக விளங்கிய அனைத்து அரசு உயர் அலுவலர்களுக்கும், அதற்கு ஒத்துழைப்பு நல்கிய பொதுமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.