தற்போதைய செய்திகள்

சென்னையில் தண்ணீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு – முதலமைச்சர் திட்டவட்டம்

சென்னை

சென்னை தாம்பரம், முடிச்சூர், வேளச்சேரி, வரதராஜபுரம் பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு காணப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

தலைமைச் செயலகத்தில் நேற்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசியதாவது:-

சென்னையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கின்ற மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யவேண்டுமென்று அரசு முழுமூச்சோடு நடவடிக்கைகளை எடுத்து கொண்டிருக்கிறது. வேளச்சேரி, முடிச்சூர், வரதராஜபுரம் மற்றும் தாம்பரம் ஆகிய பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படுவதைக் கருத்தில் கொண்டு, இதற்கு நிரந்தர தீர்வு காணுகின்ற உரிய திட்டங்களை வகுக்க அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

தொடர்ந்து கனமழை பெய்கின்ற போது மேற்குறிப்பிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் இருக்க ஒரு நிரந்தர தீர்வு காண்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது அப்பகுதிகளில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றுவதற்கு போர்க்கால அடிப்படையிலும், பெருநகர சென்னை மாநகராட்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் நீரை வெளியேற்றுகின்ற பணிகளிலும் அரசு அதிகாரிகள் ஈடுபட்டிருக்கிறார்கள்.

நிவர் புயலால் ஏற்பட்ட பயிர் சேதத்தை முறையாக கணக்கீடு செய்து பேரிடர் நிவாரண நிதியிலிருந்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கிடவும், இதுதவிர, பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தருவதற்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். அதேபோல, இந்தப் புயலால் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கும் அரசு நிவாரண உதவி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் புயலால் கால்நடைச் செல்வங்கள் இறந்திருக்கின்றன, அதற்கும் உரிய இழப்பீட்டுத் தொகை உரியவர்களுக்கு வழங்கப்படும்.

‘இந்தியா டுடே’ பத்திரிகை ஒரு ஆய்வு மேற்கொண்டு, தொடர்ந்து மூன்றாண்டுகளாக சிறப்பாக செயல்படும் பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது என்று அறிவித்திருக்கின்றது. அதில் அனைவருக்குமான உள்ளடங்கிய வளர்ச்சி விருது பெரிய மாநிலங்களில் ஒட்டுமொத்த சிறந்த செயல்பாட்டிற்கான விருது நமக்கு அளித்திருக்கிறது.

அமைச்சர்கள், அரசு உயர் அலுவலர்கள், அரசு பணியாளர்கள் ஆகிய அனைவருடைய ஒட்டுமொத்த முயற்சியின் காரணமாகத்தான் தமிழகம் முதலிடம் பெற்றது. இந்த விருதுகளை பெறுவதற்காக பாடுபட்ட அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.