சிறப்பு செய்திகள்

2 ஆயிரம் மின் கிளினிக்குகள் டிசம்பர் 15-க்குள் தொடக்கம் – முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை

தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசியதாவது.

கொரோனா வைரஸ் அதிகமாக இருந்த காலக்கட்டத்தில் வேளாண்மைத் துறை மற்றும் உள்ளாட்சித் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மூலம் வீடு, வீடாகச் சென்று மக்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள், காய்கறிகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்கப்பட்டு, பொதுமக்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாமல் அரசு பார்த்துக் கொண்டது.

மாநில அளவில் கோவிட் மருத்துவமனைகளிலும், கோவிட் சிறப்பு மையங்களிலும் 1,41,527 படுக்கைகளும், இதில் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய 34,714 படுக்கைகளும், ஐசியு வசதி கொண்ட 7,697 படுக்கைகளும், 6,517 வென்டிலேட்டர்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அரசால் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

கோவிட் நோய் தொற்றுக்கான சிறப்பு சிகிச்சை அளிக்க, மருத்துவர்கள், செவிலியர்கள், பிற மருத்துவப் பணியாளர்கள் எனக் கூடுதலாக 15,000 மருத்துவ பணியாளர்கள் பணி நியமனம் செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உயிர்காக்கும் உயரிய மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு, மாவட்ட அளவில் மருத்துவமனைகளில் போதுமான அளவு கையிருப்பில் உள்ளது. கோவிட்-19 நோய்க்கு சிறப்புச் சிகிச்சை அளிக்க கூடுதலாக மிகவும் இன்றியமையாத மற்றும் உயிர்காக்கும் மருந்துகளான டொஸிலிசுமாப் 400 எம்ஜி, ரெம்டெஸ்விர் 100 எம்ஜி, இனாக்சபெரின் 40 எம்ஜி போன்றவை கொள்முதல் செய்யப்பட்டு, அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. மருந்துகள், பரிசோதனைக் கருவிகள், என்.95 முகக்கவசங்கள், பாதுகாப்பு உடைகள் , மும்முடி முகக்கவசங்கள், சி.டி ஸ்கேன், எக்ஸ்ரே இயந்திரங்கள் ஆகியவற்றை தேவையான அளவில் தொடர்ந்து கொள்முதல் செய்து, நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிப்பதற்கு அரசால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

களப்பணியில் உள்ள அனைத்து பணியாளர்களுக்கும், கட்டுப்பாட்டு பகுதிகளில் வாழும் மக்களுக்கும், ஜிங்க் மற்றும் வைட்டமின் மாத்திரைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த நோய் மேலாண்மைக்காக அலோபதி மருத்துவத்துடன் – இந்திய முறை மருத்துவ சிகிச்சை – நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிப்பதற்காக சித்த மருந்தான கபசுர குடிநீர் பெரும்பான்மையான மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும், ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு உதவியாளருடன் 2,000 மினி கிளினிக் துவங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, டிசம்பர் மாதம் 15-ந் தேதிக்குள் மினி கிளினிக் தொடங்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.