தற்போதைய செய்திகள்

முதலமைச்சருக்கு 4-ந்தேதி மதுரையில் சிறப்பான வரவேற்பு – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்

மதுரை

மதுரைக்கு 4-ந்தேதி வருகை தரும் முதலமைச்சருக்கு மாநகர் மாவட்ட கழகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

முதலமைச்சர் வருகை குறித்து ஆலோசனை கூட்டம் மதுரை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ ஆலோசனை வழங்கினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட கழக பொருளாளர் ராஜா, மாவட்ட துணைச் செயலாளர் தங்கம், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், கழக இளைஞர் அணி இணைச் செயலாளர் கிரம்மர் சுரேஷ், கழக இலக்கிய இணைச் செயலாளர் ரமேஷ், கழக மாணவரணி இணைச்செயலாளர் குமார், முன்னாள் துணை மேயர் திரவியம், பகுதி கழக செயலாளர்கள் அண்ணாநகர் முருகன், ஜெயவேல், கருப்புசாமி, செந்தில்குமார், தளபதி மாரியப்பன், மாவட்ட அணி செயலாளர்கள் சோலை ராஜா, அரவிந்தன், இந்திராணி, எஸ்.டி.ஜெயபாலன், மாணிக்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:-

இந்த இயக்கம் இன்னும் 100 ஆண்டுகள் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று அம்மாவின் லட்சிய முழக்கத்தை தங்களது தாரக மந்திரமாக கொண்டு இரவு பகல் பாராது உழைத்து அம்மாவின் கனவு திட்டங்கள் எல்லாவற்றையும் இன்றைக்கு முதல்வரும், துணை முதல்வரும் நனவாக்கி வருகின்றனர்.

உலகத்தை உலுக்கிய கொரோனா என்ற கொடிய வைரஸ் நோயை கட்டுப்படுத்தி தமிழகம் நோய் தடுப்பு நடவடிக்கையில் முன்னோடியாக உள்ளது. தமிழகத்தை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று பாரதப் பிரதமரும், உள்துறை அமைச்சரும் நமது முதலமைச்சரை பாராட்டியுள்ளனர். இது தமிழகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு ஆகும்.

இந்தியா டுடே நிறுவனம் மூலம் ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் சிறந்த மாநிலம் என்று ஆய்வு செய்து விருது வழங்கி வருகிறது. அதனைத்தொடர்ந்து இந்த 2020ம் ஆண்டிலும் இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களில ஆய்வு செய்ததில் வேளாண்மை, சுகாதாரம், சட்டம் ஒழுங்கு, தொழில் முதலீடு, வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்பு இப்படி அனைத்து துறையிலும் ஆய்வு செய்து அதில் இந்தியாவிலேயே தமிழகம் தான் சிறந்த மாநிலமாக உள்ளது என்று தேர்வு செய்து அதற்கான விருதையும் அறிவித்துள்ளது.

ஏற்கனவே கடந்த 2018 மற்றும் 2019 ம் ஆண்டுகளில் தமிழகம் சிறந்த மாநிலம் என்ற விருதினை இந்தியா டுடே நிறுவனம் வழங்கியது. தற்போதும் மூன்றாம் முறையாக சிறந்த மாநிலமாக தமிழகத்தை அறிவித்து உள்ளது. இந்த விருது ஒட்டுமொத்த தமிழ் தேசத்திற்கும் கிடைத்த பெருமையாகும். அந்தப் பெருமையை தனது அயராத உழைப்பால் முதலமைச்சர் பெற்றுத் தந்துள்ளார்.

புரட்சித்தலைவர் நூற்றாண்டு விழாவின் போது மதுரையின் மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வண்ணம் ரூ.1200 கோடி மதிப்பில் லோயர் கேம்ப் பகுதியில் இருந்து குழாய் மூலம் மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் 24 மணி நேரமும் தண்ணீர் கிடைக்கும் வகையில் திட்டத்தை முதலமைச்சர் அறிவித்தார். அதனைத்தொடர்ந்து வருகின்ற 4-ந்தேதி இந்த திட்டத்திற்கு தனது பொற்கரங்களால் மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் முதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார்

அதனைத் தொடர்ந்து மதுரை மாவட்ட அலுவலகத்தில் ரூ.33 கோடியில் கட்டிமுடிக்கப்பட்ட புதிய ஆட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் திறந்து வைக்கிறார். மதுரைக்கு மக்கள் யாரும் கேட்காமலேயே தொடர்ந்து அட்சய பாத்திரம் போல் திட்டங்களை வழங்கி வரும் முதலமைச்சருக்கு மதுரை மாநகர மக்களின் சார்பில் நன்றியை செலுத்தும் வண்ணம் வருகின்ற 4-ந்தேதி முதலமைச்சர் வருகை தரும்போது மதுரை மாநகர் மாவட்ட கழகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.