தற்போதைய செய்திகள்

கோவையில் 588 பெண்களுக்கு விலையில்லா நாட்டுக்கோழிகள் – அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி- கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினர்

கோவை

கோவையில் 588 பெண்களுக்கு விலையில்லா நாட்டுக்கோழிகளை அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆகியோர் வழங்கினர்.

கோயம்புத்தூர் மாவட்டம், இக்கரைபோளுவாம்பட்டி, தேவாரயபுரம், வெள்ளிமலைபட்டிணம், ஆகிய ஊராட்சிகளில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் மாநில கோழி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அசில் இன நாட்டுக்கோழிகள் வழங்கும் விழாவில் ரூ.11.84 லட்சம் மதிப்பில் அசில் இன நாட்டுக்கோழிகளை 588 பயனாளிகளுக்கு கழக அமைப்புச் செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி, பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோர் வழங்கினர்.

பின்னர் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது:-

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிரின் வாழ்வாதாரத்தை பெருக்கிடும் வகையில் விலையில்லா வெள்ளாடுகள், செம்மறிஆடுகள் வழங்கும் திட்டம், விலையில்லா கறவை பசுக்கள் வழங்கும் திட்டம், கோழி அபிவிருத்தித் திட்டம் போன்ற திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் வகையில் 2011-12 ஆம் ஆண்டு முதல் நாளது வரை புதியதாக 3 கால்நடை மருத்துவமனைகள், 49 கால்நடை மருந்தகங்கள், 18 கால்நடை கிளை நிலையங்கள் தோற்றுவிக்கப்பட்டு, புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு, கால்நடைகளுக்கு சிகிச்சை, செயற்கை முறை கருவூட்டல் தடுப்பூசி, குடற்புழு நீக்கம் போன்ற பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

பால் உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2018-19-ம் ஆண்டு வரை 854 கறவை பசுக்கள் ரூ.343.30 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. 2020-21-ம் ஆண்டில் 400 பயனாளிகளுக்கு 400 கறவை பசுக்கள் ரூ.159.60 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டு வருகிறது.

கிராமப்புற மக்களின் புரத தேவைகளை சுயமாக நிறைவேற்றிக் கொள்ளும் விதமாகவும், கோழி அபிவிருத்தி திட்டத்தின்கீழ் புறக்கடை கோழிகள் வளர்ப்புத் திட்டம், ஏழை, எளிய மக்களுக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தில் பெண்கள், ஆதரவற்ற விதவைகள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படுகிறது.

2011-12 முதல் 2018-19-ம் ஆண்டு வரை 3750 பயனாளிகளுக்கு 1 லட்சத்து 55 ஆயிரத்து 800 கோழி குஞ்சுகள் ரூ.187.23 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது. 2019-2020-ம் ஆண்டில் ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளிலுள்ள 15 ஆயிரத்து 175 பெண் பயனாளிகளுக்கு நான்கு வார வயதுடைய 3 லட்சத்து 79 ஆயிரத்து 375 அசில் இன நாட்டுக் கோழிக்குஞ்சுகள் ரூ.310 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டு வருகிறது.

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் 4,212 பயனாளிகளுக்கு 1 லட்சத்து 9 ஆயிரத்து 100 கோழிகுஞ்சுகள் ரூ.80.51 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது. ஒரு பயனாளிக்கு ரூ.1845 மதிப்புள்ள 25 அசில் இன நாட்டுக்கோழிகள் வழங்கப்படுகிறது. மேலும் கோழி வளர்ப்பு பயிற்சிக்கென ரூ.150-ம், ரூ.20 மதிப்புள்ள பயிற்சிபுத்தகம் என மொத்தம் ரூ.2015 மதிப்பில் ஒரு பயனாளிக்கு வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை பெண்கள், தங்கள் வாழ்வில் சுயசார்பு அடைந்து, தங்களைத் தாங்களே பொருளாதாரத்தில் முன்னேற்றிக் கொள்ளும் வாய்ப்பாகவும் இத்திட்டம் அமையும், இத்திட்டத்தினை கோயம்புத்தூர் மாவட்டத்தினைச் சேர்ந்த பயனாளிகள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி, மாவட்ட வருவாய் அலுவலர் இராமதுரைமுருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர்(பொ) ரூபன்சங்கர்ராஜ், தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றிக்குழுத் தலைவர் மதுமதி விஜயகுமார், மாவட்ட நிர்வாகிகள் என்.கே.செல்வதுரை, ஜிகே.விஜயகுமார், ஒன்றிய செயலாளர்கள் டிபி.வேலுச்சாமி, ராஜா (எ) ராமமூர்த்தி, டி.சக்திவேல், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் டிசி.பிரதீப், கருடா சுரேஷ், ஆறுச்சாமி, ஜெயபால், விராலியூர் நடராஜ், மோகன்ராஜ், ஆர்.சசிகுமார், நிஷ்கலன், ஒன்றிய கவுன்சிலர்கள் கார்த்திகா பிரகாஷ், செல்வராஜ், ஊராட்சித் தலைவர்கள் சதானந்தன், தனமணி மூர்த்தி, நாகமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.