அரியலூர்

வாரிசு அரசியல் நடத்துகிறார் எந்தவித தகுதியும் இல்லாதவர் ஸ்டாலின் – தாமரை எஸ்.ராஜேந்திரன் தாக்கு

அரியலூர்

வாரிசு அரசியல் நடத்தும் ஸ்டாலினுக்கு எந்தவித தகுதியும் கிடையாது என்று அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் கூறினார்.

சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்காக பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் அரியலூர் மாவட்ட கழக அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், அரசு தலைமை கொறடாவும், அரியலூர் சட்டமன்ற உறுப்பினருமான, தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட அறங்காவலர் குழு தலைவருமான ஜே.கே.என்.ராமஜெயலிங்கம் முன்னிலை வகித்தார். மாவட்ட மாணவரணி செயலாளர் ஓ.பி.சங்கர் வரவேற்றுப் பேசினார்.

இக்கூட்டத்தில், அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் பேசியதாவது:-

தமிழகத்தில் எடப்பாடியார் தலைமையில், சிறப்பான நல்லாட்சி நடைபெற்று வருகிறது. இத்தகைய எழுச்சி வரலாறு, கழகத்துக்கு மட்டுமே சொந்தமானது. எந்தவித தகுதியும் இல்லாத ஸ்டாலின் போன்றவர்கள், வாரிசு அரசியல் நடத்தி கொண்டிருக்கிறார்கள். தெளிவில்லாத ஒரு தலைமையை வைத்துக்கொண்டு, எந்த பொய்யையாவது கூறி, ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என, திமுக துடித்து கொண்டிருக்கிறது.

கடந்த சட்டமன்றத்தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றபோது, அரியலூர் மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லூரி கொண்டு வருவேன் என, நான் வாக்குறுதி தரவில்லை. ஆனால் இரண்டு சட்டமன்ற தொகுதிகளை மட்டுமே கொண்ட அரியலூர் மாவட்டத்திற்கு, அரசு மருத்துவக் கல்லூரியை வழங்கியுள்ளார் முதல்வர் எடப்பாடியார்.

அதேபோல ஜெயங்கொண்டம் தொகுதிக்கு, அரசு கலைக்கல்லூரியும் வழங்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லூரி வழங்கிய வரலாற்று நாயகனாக திகழ்கிறார் முதல்வர் எடப்பாடியார். கடந்த உள்ளாட்சி தேர்தலிலும், அரியலூர் மாவட்டத்தில் கழகம் வரலாறு காணாத வெற்றியை பெற்றது. அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற, எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடியார், இந்த மாவட்டம் சிறியது. ஆனால் விழா பெரியது எனப் பாராட்டிப் பேசினார்.

கிளைக் கழகங்கள் தோறும் அமைக்கப்படவுள்ள பூத் கமிட்டியில், கழகம் சார்பிலான ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரையும் இணைத்து, சிறப்பாக செயல்படும்படி, கழக நிர்வாகிகள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் பேசினார்.

இக்கூட்டத்தில் மாநில எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் அறிவு என்கிற சிவசுப்பிரமணியன், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ரீடு செல்வம், மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் ஜீவா அரங்கநாதன், செல்வாம்பாள், கழக ஒன்றிய செயலாளர்கள் அரியலூர் செல்வராஜ், பொய்யூர் பாலசுப்பிரமணியன், திருமானூர் குமரவேல், வடிவழகன், ஆண்டிமடம் சிலம்பூர் மருதமுத்து, தா.பழூர் வைத்தியநாதன், அசோகன், ஜெயங்கொண்டம் தங்க பிச்சமுத்து, ஜெயங்கொண்டம் நகர செயலாளர் செல்வராஜ், வக்கீல் எஸ்.வி.சாந்தி, கழக நிர்வாகிகள் கல்லங்குறிச்சி பாஸ்கர், பிரேம்குமார், கொளஞ்சிநாதன், பாலமுருகன், சுத்தமல்லி கண்ணன் மற்றும் கழகத்தின் பல்வேறு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முடிவில் அரியலூர் நகர செயலாளர் ஏ.பி.செந்தில் நன்றி கூறினார்.