தற்போதைய செய்திகள்

தேர்தலை சந்திக்க தி.மு.க.வுக்கு பயம் – அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் பேச்சு

திருச்சி

கழகத்துக்கு செல்வாக்கு அதிகரித்து வருவதால் சட்டமன்ற தேர்தலை சந்திக்க தி.மு.க. பயத்தில் உள்ளது என்று அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் கூறினார்.

2021-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலையொட்டி மகளிர் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக திருச்சி தென்னூரில் உள்ள மாநகர் மாவட்டக் கழக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக செயலாளரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான வெல்லமண்டி என்.நடராஜன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கழக பொருளாளர் மலைக்கோட்டை வி.அய்யப்பன் வரவேற்று பேசினார்.

கழக வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் ராஜ்குமார், அறங்காவலர் குழு தலைவர் கே.சி.பரமசிவம். மாவட்ட துணை செயலாளர்கள் எம்.அருள்ஜோதி, அ.ஜாக்குலின், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் வி.பத்மநாதன், மாணவரணி மாவட்ட செயலாளர் சி.கார்த்திகேயன், மகளிர் அணி மாவட்ட செயலாளர் தமிழரசி சுப்பையா, அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் அ.ஜெயபால், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் ஏ.எம்.மீரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் மாநகர் மாவட்டக் கழக செயலாளரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான வெல்லமண்டி என்.நடராஜன் பேசியதாவது:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் நடவடிக்கையால் கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நான் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவன். இன்று சுற்றுலாத்துறை அமைச்சராக இருக்கிறேன். இதுபோல் சாதாரண தொண்டனும் கழகத்தில் மட்டுமே அமைச்சராக முடியம் என்பதற்கு நானே உதாரணமாக இருக்கிறேன்.

எனவே கழகத்தில் உண்மையாக உழைப்பவர்களுக்கு நிச்சயம் நல்ல எதிர்காலம் உண்டு என்பதை மனதில் கொண்டு கழக நிர்வாகிகள் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்ற வேண்டும். எண்ணற்ற மக்கள் நலப்பணிகளை அரசின் சார்பிலும், கழகத்தின் சார்பிலும் செய்து வருவதால் மக்கள் மத்தியில் கழகத்தின் செல்வாக்கு உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்ள போகிறோம் என்ற தி.மு.க அச்சத்தில் உள்ளது.

கழக நிர்வாகிகள் 3 மாதம் கஷ்டப்பட்டு தேர்தல் பணியாற்றினால் மீண்டும் தொடர்ச்சியாக 3-வது முறையாக கழக ஆட்சி தொடரும். நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஒவ்வொரு பூத்களிலும் சிந்தாமல், சிதராமல் ஓட்டுகளை பெறும் வகையில் ஏற்கனவே பாசறை உறுப்பினர்களை கொண்டு பூத்கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதை போன்று, முழுக்க, முழுக்க மகளிரை கொண்டும் பூத் கமிட்டி அமைக்க தலைமை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திறமையாக செயல்படும் மகளிரை பூத் கமிட்டியில் சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் பேசினார்.