தற்போதைய செய்திகள்

முதலமைச்சரை வரவேற்க சிவகங்கை மக்கள் ஆர்வம் – அமைச்சர் ஜி.பாஸ்கரன் தகவல்

சிவகங்கை

கொரோனா தடுப்பு பணியை ஆய்வு செய்ய 4-ந்தேதி வருகை தரும் முதலமைச்சரை வரவேற்க சிவகங்கை மக்கள் ஆர்வமாக உள்ளனர் என்று அமைச்சர் ஜி.பாஸ்கரன் தெரிவித்தார்.

கொரோனா தடுப்பு பணி ஆய்வுக்காக சிவகங்கை மாவட்டத்திற்கு வருகிற 4-ந்தேதி வருகை தரும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு மாவட்ட கழகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பதற்கான ஆலோசனை கூட்டம் சிவகங்கையில் மாவட்ட கழக செயலாளர் செந்தில்நாதன் தலைமையில், கதர் மற்றும் கிராமத்தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சர் ஜி.பாஸ்கரன் பேசியதாவது:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி எடுத்து வரும் தீவிர நடவடிக்கையால் இன்று தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டதன் பயனாக இன்று தமிழகம் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வருகிறது. நமது மாவட்டத்திற்கு ஆய்வுக்கு வரும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு மாவட்ட கழகம் சார்பில் சிறப்பான வரவேற்பை அளிக்க வேண்டும்.

சிவகங்கை மாவட்டத்தின் வரலாற்று சிறப்புகளை முதலமைச்சர் மற்றும் உலகம் அறிய நாம் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நமது மாவட்டத்தின் சிறப்புகளை வெளியுலகம் அறிய கழக நிர்வாகிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். குடிமராமத்து நாயகன் முதலமைச்சரை வரவேற்க நம்மை விட மக்கள் ஆர்வமாக இருக்கின்றனர். அரசு விதிமுறைகளை நிர்வாகிகள் கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் பாஸ்கரன் பேசினார்.