சிறப்பு செய்திகள்

உள்ளாட்சித்துறை அமைச்சர்,மேயராக இருந்தபோது ஸ்டாலின் தூங்கி கொண்டு இருந்தாரா? முதலமைச்சர் காட்டமான கேள்வி

சென்னை

உள்ளாட்சித்துறை அமைச்சர், மேயராக இருந்தபோது ஸ்டாலின் தூங்கி கொண்டு இருந்தாரா என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று நிவர் புயல் காரணமாக தண்ணீர் தேங்கியுள்ள பள்ளிக்கரணை, ஒக்கியம் மடு, முட்டுக்காடு ஆகிய பகுதிகளில் நீரை வெளியேற்றுவதற்கான பணிகள் குறித்து ஆய்வு செய்த பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

திமுக தலைவர், எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்விக்கு நான் பதில் சொல்கிறேன். சென்னை இப்பொழுதா வந்தது, எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு துவங்கியது. இவர் மேயராக இருந்தார், என்ன செய்து கொண்டிருந்தார்? தூங்கிக் கொண்டு இருந்தாரா? உள்ளாட்சித்துறை மந்திரியாக இருந்தார்? அப்பொழுதும் தூங்கிக் கொண்டு இருந்தாரா? அவர் நிறைவேற்ற முடியாத திட்டங்களையெல்லாம் நாங்கள்தான் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.

பாராட்ட மனமில்லாவிட்டாலும், பழி சுமத்தாமல் இருந்தாலே சரியாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். அதுமட்டுமல்ல, இந்த ஆட்சியில் ஒன்றுமே நடக்கவில்லை என்கிறார. துறை வாரியாக விருதுகளை பெற்றிருக்கிறோம். வேளாண்மைத் துறையில் க்ரிஷ் கர்மான் விருது தொடர்ந்து பெற்றுக்கொண்டிருக்கிறோம். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் விருது பெற்றிருக்கிறோம்.

நீர் மேலாண்மையில் தேசிய விருது பெற்றிருக்கிறோம். போக்குவரத்துத் துறையில் விருதுகளைப் பெற்றிருக்கிறோம். மின்சாரத்துறையில் விருது, கல்வித்துறையில் விருது என பல்வேறு துறைகளில் தேசிய விருதுகளை பெற்றிருக்கிறோம். அப்படி ஒரு அரசு சிறப்பாக செயல்பட்ட காரணத்தால்தான் இந்த விருதுகளைப் பெற முடிந்தது. அவர் வீட்டிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். நாட்டு மக்களை வந்து பார்த்தால்தானே என்ன திட்டம் நிறைவேற்றுகிறோம் என்று தெரியும். வீட்டில் இருந்து பார்ப்பதற்கு ஒன்றும் தெரியாது.

வீட்டிலிருந்து காணொலிக் காட்சி மூலம் கட்சியினரிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அங்கே கூட கூலிங் கிளாஸ், கைக்கு உறை போட்டுக் கொண்டுதான் பேசிக்கொண்டிருக்கிறார். அப்படிப்பட்ட தலைவருக்கு அரசு செயல்படுத்துகின்ற திட்டங்கள் தெரியாது. ஆகவே, வெளியில் வந்து மக்களைப் பார்த்தால்தான், இந்த அரசாங்கம் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தியிருக்கிறது. அதனால் மக்கள் என்ன நன்மை அடைந்தார்கள் என்ற விவரம் தெரியும். அந்த விவரங்களைத் தெரிந்து எதிர்க்கட்சித்தலைவர் பேசினார் என்றால் நன்றாக இருக்கும்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.