தற்போதைய செய்திகள்

முதியோர்- விதவை ஓய்வூதியம் பெற பயனாளிகளுக்கு ஆணை – அமைச்சர் பி.தங்கமணி வழங்கினார்

நாமக்கல்

குமாரபாளையத்தில் வீடு வீடாக சென்று குறை கேட்ட அமைச்சர் பி.தங்கமணி முதியோர், விதவை ஓய்வூதியம் பெற 15 பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சி 3-வது வார்டு பகுதியில் வீடு, வீடாக சென்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் கா.மெகராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணி பொது மக்களிடமிருந்து முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், குடிநீர் வசதி, சிமெண்ட் சாலை அமைத்தல், தொழிற்கடன், ஆவின் பாலகம் அமைத்தல், வேலைவாய்ப்பு உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

பொது மக்களிடமிருந்து பெற்ற மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக தீர்வு காண வேண்டும் என அமைச்சர் பி.தங்கமணி அறிவுறுத்தினார். பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் 15 பயனாளிகளுக்கு முதியோர் மற்றும் விதவை ஓய்வூதியமாக மாதம் ரூ.1,000 பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார்.

குமராபாளையம் நகராட்சி 3-வது வார்டு பெரந்தார்காடு பகுதியை சேர்ந்த விபத்தில் முதுகுத்தண்டு வடம் பாதிக்கப்பட்ட பெயிண்டர் ப.ரமேஷ் மனு அளித்ததன் அடிப்படையில் தனக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான அதிநவீன வசதிகளுடன் கூடிய பேட்டரியினால் இயங்கும் மின்மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலி வழங்கப்பட்டதற்காக முதலமைச்சருக்கும், அமைச்சர் பி.தங்கமணிக்கும் நன்றி தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் திருச்செங்கோடு கோட்டாட்சியர் ப.மணிராஜ், குமாரபாளையம் நகர கழக செயலாளரும், தமிழ்நாடு நகர கூட்டுறவு வங்கிகளின் இணையத்தின் இயக்குநருமான ஏ.கே.நாகராஜன், நகராட்சி ஆணையாளர் சி.ஸ்டான்லி பாபு, உள்பட அரசு அலுவலர்கள் கூட்டுறவாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.