தற்போதைய செய்திகள்

அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முன்னோடி – அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா பெருமிதம்

நாமக்கல்

அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா பெருமிதத்துடன் கூறினார்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம் ரா.பட்டணம் பேரூராட்சி காந்திநகரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் கட்டும் பணி, சந்திரசேகரபுரம் ஊராட்சியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டடம் கட்டும் பணி ஆகியவற்றை கழக மகளிர் அணி இணை செயலாளரும், சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சருமான டாக்டர் வெ.சரோஜா பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

முதலமைச்சர் தலைமையிலான அம்மா அவர்களின் அரசு மக்களை தேடி உதவிகளை வழங்கும் அரசாக செயல்பட்டு வருகிறது. இதனால் ராசிபுரம் சட்டமன்ற பகுதிகளானது அனைத்து வசதிகளையும் பெற்ற தொகுதியாக விளங்குகிறது. இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூட கட்டடம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த கட்டடப் பணிகள் முடிவடைந்து சமுதாயக் கூடம் தை மாதத்தில் பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

மேலும் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் 29 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தின் கீழ் 5 லட்சம் பயனாளிகளுக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்க முதலமைச்சர் விதி 110-ன் கீழ் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

ராசிபுரத்தில் 50-க்கும் மேற்பட்டவர்கள் முதியோர் உதவித்தொகை வழங்க மனு கொடுத்துள்ளனர். அவர்களுக்கு மிக விரைவில் தீர்வு காணப்பட்டு முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படும். இந்தியாவில் அனைத்து துறைகளிலும் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. சிறந்த முதலமைச்சர் என்ற விருதை தொடர்ந்து 3-வது முறையாக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பெற்றிருக்கிறார்.

கொரோனா நோய் தொற்று முன்தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், கைகளை நன்கு சோப்பு பயன்படுத்தி கழுவ வேண்டும், கைகளுக்கு கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா கூறினார்.