தற்போதைய செய்திகள்

பதக்கம் வென்ற மாணவர்களுக்கு உயரிய ஊக்கத் தொகை – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்

திருவண்ணாமலை

தேசிய விளையாட்டுப்போட்டிகளில் பதக்கம் வென்ற திருவண்ணாமலை மாணவர்களுக்கு உயரிய ஊக்கத் தொகைகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருவண்ணாமலை பிரிவின் சார்பாக கடந்த 2018-2019-ம் ஆண்டு நடைபெற்ற 64-வது தேசிய பள்ளிக் கல்வி குழும விளையாட்டு போட்டிகளில் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு பிரிவின் சார்பாக பங்கேற்று பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கு முதலமைச்சரின் உயர் ஊக்கத்தொகைகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்.

தடகள விளையாட்டில் பங்கேற்ற வி.டி.எஸ். ஜெயின் மேல்நிலைப் பள்ளி மாணவி ஸ்ரீவித்யா, கைப்பந்து விளையாட்டில் பங்கேற்ற சொரக்கொளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ஸ்னேகா, ஆகியோர் இரண்டாம் இடம் பிடித்ததற்காக தலா ரூ.1.50 லட்சம் உயர் ஊக்கத் தொகையும், கோ-கோ விளையாட்டில் பங்கேற்ற மேல்பள்ளிப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி

ர.பவித்ரா மூன்றாம் இடம் பிடித்ததற்காக ரூ.1 லட்சம் உயர் ஊக்கத் தொகையையும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்.

நிகழச்சியில் தூசி கே.மோகன் எம்.எல்.ஏ., மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப்நந்தூரி, அரசு வழக்கறிஞர் க.சங்கர், மாவட்ட ஆவின் துணைத் தலைவர் பாரி பி.பாபு, ஒன்றிய செயலாளர்கள் பிஆர்ஜி.சேகர். ஜி.வி.கஜேந்திரன், ப.திருமால், நகர செயலாளர் அசோக்குமார் உள்ளிட்டோர் உள்ளனர்.