சிறப்பு செய்திகள்

ஏழைகளுக்கு கொடுப்பதை தடுப்பவர் ஒரு தலைவரா? ஸ்டாலினை புறக்கணிக்க முதலமைச்சர் வேண்டுகோள்

திருச்சி

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று முன்தினம் நாமக்கல் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். நேற்றும் 2-வது நாளாக நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார்.

ஒரு சில இடங்களில் வீடு வீடாக சென்று கழக அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார். மேலும் பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டு எழுச்சி உரையாற்றினார். இது தவிர தொழிலதிபர்கள், வியாபாரிகள், முக்கிய பிரமுகர்கள், மலைவாழ் மக்கள், விவசாயிகள், மகளிர் சுய உதவி குழுவினருடன் சந்திப்பு போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஆதரவு திரட்டினார். செல்லும் இடங்களில் எல்லாம் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு மக்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொட்டியம் மற்றும் முசிறி ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தின் போது முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:-

தி.மு.க-காரர்களுக்கு நல்ல எண்ணம் கிடையாது, அவர்களின் தலைவருக்கும் கிடையாது, தொண்டனுக்கும் கிடையாது. தி.மு.க ஆட்சி என்றாலே அராஜக ஆட்சி, தி.மு.க. ஆட்சி என்றாலே நில அபகரிப்பு, சட்டம் ஒழுங்கு சீர்கேடாக தான் இருந்தது. ஆனால் கழக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பேணிக்காப்பதில் முதன்மையாக விளங்குகின்றோம். சமீபத்தில் ஸ்டாலின் கூறியிருக்கிறார். பொய் சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும் என கூறியிருக்கிறார். 2006 தி.மு.க தேர்தல் அறிக்கையிலே நில இல்லாத விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தீர்கள். எங்கு வழங்கினீர்கள். எனவே பொய் சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும் என்ற பழமொழி ஸ்டாலினுக்குத்தான் சரியாக பொருந்தும்.

கழக அமைச்சர்கள் மீதும், என் மீதும் ஊழல் செய்திருப்பதாக ஊழல் பட்டியல் வழங்கியிருக்கிறார்கள். டெண்டரே கோரப்படவில்லை அதற்குள்ளே ஊழல் என்று கூறுகிறார்கள். டெண்டரே கோரப்படாத போது ஊழல் எவ்வாறு நடைபெறும். இது கூட உங்களுக்கு தெரியவில்லை. யாரோ எழுதிக் கொடுப்பதை ஒப்புவித்து வருகிறீர்கள். வேறு மாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்த அந்த நபர் சொல்லுகின்ற வழியில் தி.மு.க தற்போது நடைபெற்று வருகிறது.

கழகத்தின் மடியில் கனம் இல்லை, வழியில் பயம் இல்லை. ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசாங்கம் என்றால் அது தி.மு.க. அரசு தான். தி.மு.க கட்சி அவதூறு செய்தியையைப் பரப்பி வருகிறது. கவர்ச்சிகரமான பொய்யான வாக்குறுதிகளை அளித்து இனியும் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது. தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு கண்ணே தெரியவில்லை தமிழ்நாட்டிலே என்ன நடக்கிறது என்று அவருக்கு தெரியவில்லை.

அம்மாவின் அரசு ஏழை, எளிய மக்கள் தைத்திருநாளாம் பொங்கல் திருநாளை அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்பதற்காக 2 கோடியே 6 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2500, முழுக்கரும்புடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அறிவித்து, வருகின்ற 4-ந் தேதி முதல் வழங்கப்படவுள்ளது. ஆனால், எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் இதை தடுப்பதற்கு முயற்சி செய்துக்கொண்டிருக்கின்றார். அவருடைய கட்சி வக்கீல் வில்சன் நீதிமன்றத்தில் தடை ஆணை பெற முயற்சி செய்துக்கொண்டிருக்கின்றார்.

ஆனால், ஸ்டாலின் வெளியில் பேசுகின்றபோது பொங்கல் பரிசு வழங்க நாங்கள் தடையாக இருக்கவில்லை என்று சொல்கிறார். ஏழை எளிய மக்களுக்கு கொடுக்கும் நலத்திட்டங்களை நிறுத்துகின்றவர் ஒரு தலைவரா? மாநிலத்தின் முதலமைச்சர் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகின்றார். ஏழை எளிய மக்களின் வாழ்வு வளம்பெற வேண்டும் என்பதற்காக வழங்கப்படும் நலத்திட்டங்களை தடுக்கும் ஸ்டாலினை மக்கள் புறக்கணிக்க வேண்டும். வருகின்ற தேர்தலில் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.