தற்போதைய செய்திகள்

கழக ஆட்சி தொடர்வதை யாராலும் தடுக்க முடியாது – துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ெஜயராமன் பேச்சு

திருப்பூர்

கழக ஆட்சி தொடர்வதை யாராலும் தடுக்க முடியாது என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் கூறினார்.

திருப்பூர் மாநகர் மாவட்டம் காங்கேயம் ஒன்றிய கழகம் சார்பில் தகவல் தொழில்நுட்பு பிரிவு, இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் என்.எஸ்.என். திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு காங்கேயம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.எஸ்.என்.நடராஜ் தலைமை தாங்கினார் திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சு. குணசேகரன் முன்னிலை வகித்தார் இக்கூட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எனக்கு பின் கழகமும், கழக ஆட்சியும் தமிழகத்தை 100 ஆண்டுகள் ஆளும் என்று சூளுரைத்தார். அனைவரும் உணர்வுப்பூர்வமாக பணியாற்றினால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கழக ஆட்சி தொடர்வதை யாராலும், எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான கழக அரசு பல்வேறு பணிகளை நிறைவேற்றியுள்ளது.
அனைத்து குளங்கள், நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு தண்ணீர் பஞ்சம் தமிழ்நாட்டில் எந்த ஒரு பகுதியிலும் வராதவாறு நீர் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

கொரோனா காலத்தின்போது ஆரம்பம் முதல் இதுவரையிலும் நோய் பரவாமல் கட்டுக்குள்ளேயே வைத்துள்ளது.
ஓட்டு போட்ட மக்களை ஏமாற்றாமல் அவர்களின் தேவையை அறிந்து அனைத்தையும் செய்து கொடுத்தது அம்மாவின் அரசு மட்டுமே. ஐந்தாண்டுகளில் 50 ஆண்டுகால வளர்ச்சியை அம்மா அரசு தந்துள்ளது.

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே உள்ளன. திமுக 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாததால் வெறி கொண்டு ஆட்சிக்கு வரவேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கின்றனர். மக்களிடையே பொய் பிரச்சாரங்களை பரப்பி வருகின்றனர். அது ஒருபோதும் எடுபடாது. கழக ஆட்சி மீண்டும் அமைவது உறுதி. அம்மா கூறியது போல மீண்டும் கழக ஆட்சி தமிழகத்தில் மலர வேண்டும். கழக ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களை ஒவ்வொருவரிடமும் கொண்டுபோய் சேர்க்க வேண்டும்.

இவ்வாறு துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசினார்.