தற்போதைய செய்திகள்

பொது இடங்களில் முகக் கவசம் அணியாவிட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் உத்தரவு

சென்னை

பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் க.சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, அனைத்துமாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி மூலம் 28ம்தேதி ஆலோசனை நடத்தினார். அப்போது, பொதுமக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதையடுத்து, தலைமைச் செயலாளர் க.சண்முகம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

கொரோனா நோய்த்தொற்றை குறைக்க ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.சென்னை, கோயம்புத்தூர், சேலம், திருவள்ளூர், செங்கல்பட், ஈரோடு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நோய் தடுப்பு பணியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை குறையக்கூடாது. அனைத்து மாவட்டங்களிலும் இறப்பு விழுக்காடு குறைக்கப்பட வேண்டும். சிறந்த சிகிச்சை முறையை பின்பற்றுவதன் மூலம் இறப்பு விகிதத்தை பூஜ்ஜியமாக கொண்டுவர, மாவட்ட ஆட்சியர்கள் இலக்கு நிர்ணயிக்க வேண்டும்.

சமீப நாட்களாக பொதுமக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதிலும், சமூக இடைவெளியை பின்பற்றுவதிலும் போதிய அளவில் நடந்து கொள்ளவில்லை என்றும், சுமார் 30 சதவீத மக்கள் இதனை பின்பற்றுவதில்லை என்று தெரிய வந்துள்ளது. பொது இடங்களில் பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணியாவிட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை ஆட்சியர்கள் அமல்படுத்த வேண்டும்.

தனிமனித இடைவெளி இல்லாமல் மக்கள் கூடுவதை முற்றிலுமாக தடுக்க வேண்டும். திருமண நிகழ்ச்சிகள், வணிக வளாகங்கள், பொது இடங்கள், சந்தை உள்ளிட்ட இடங்களில் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றுவதை மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டும். கொரோனா விதிமுறைகளை மீறுவோர் மீது அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அபராதம் வசூலிக்க வேண்டும். கொரோனா நோய் தொற்றிலிருந்து மீண்ட பின்பும் அவர்கள் நடந்து கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து தேவையான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது