தற்போதைய செய்திகள்

தனித்தமிழ் சொற்களுடன், தமிழ் மருத்துவ சொற்களை இணைக்க ஒப்பந்தம் – அமைச்சர் க.பாண்டியராஜன் முன்னிலையில் கையெழுத்து

செங்கல்பட்டு

தனித்தமிழ் சொற்களுடன், தமிழ் மருத்துவ சொற்களை இணைக்க இரண்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் அமைச்சர் க.பாண்டியராஜன் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.

செங்கல்பட்டு மேற்கு தாம்பரம் சானிடோரியத்தில் உள்ள, தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் ‘தமிழும் தமிழ் மருத்துவமும் – விழிப்புணர்வு விழா மற்றும் சித்தர் திருநாள் விழா’ நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க.பாண்டியராஜன், மாவட்ட ஆட்சியர் ஜான்லூயிஸ், மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் இரண்டு நிறுவனங்களும் இணைந்து, தனித்தமிழ் சொற்களுடன், தமிழ் மருத்துவ சொற்களை இணைப்பது, தொடர்பாக ஒப்பந்தத்தில், அமைச்சர் முன்னிலையில் கையெழுத்திட்டனர்.

இந்நிகழ்ச்சியின் போது ‘சொல் உண்டியல்’ திறக்கப்பட்டு, சித்த மருத்துவ நிறுவனத்தில், பயிலும் மாணவர்கள், தங்கள் துறைகளில் உள்ள, ஆங்கில் மருத்துவ வார்த்தைகளுக்கு நிகரான, தமிழ் வார்த்தைகளை, காகிதங்களில் எழுதி, உண்டியலில் செலுத்தினர்.

அப்போது அமைச்சர் க.பாண்டியராஜன் பேசுகையில், “கபசுர குடிநீரின் மருத்துவ குணம் குறித்து, உலகிலேயே தலைசிறந்த, மருத்துவ இதழான, ‘லேன்செட்’ இதழில் வெளியாகி உள்ளது, இந்திய மருத்துவத்திற்கு, கிடைத்த அங்கீகாரமாகும். இது, கபசுர குடிநீரை, சர்வதேச அளவில், நிலைநிறுத்தி உள்ளது.

சொற்குவை திட்டத்தால், 2019 முதல், 3.90 லட்சத்திற்கும் மேற்பட்ட, தனித்தமிழ் சொற்கள் உருவாகி உள்ளன. இத்திட்டத்தில், கல்லூரி மாணவர்களை ஊக்குவிக்க, 10 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. “முக.ஸ்டாலின் அரசியலுக்காக பொங்கல் பரிசு திட்டம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். ஏற்கனவே கடந்த முறை ஆயிரம் கொடுக்கும்போது வழக்கு தொடுத்து தோற்று போனவர் முக.ஸ்டாலின்.

இவ்வாறு அமைச்சர் க.பாண்டியராஜன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் பரங்கிமலை மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் என்.சி.கிருஷ்ணன், தாம்பரம் நகர கழகச் செயலாளர் எம்.கூத்தன், மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் எல்லார் செழியன், மாவட்ட பிரதிநிதி பி.கே.பரசுராமன், நகர பொருளாளர் சி.சாய்கணேஷ், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் இரா.மோகன், கழக நிர்வாகிகள் சேலையூர் சங்கர், வீராசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.