தற்போதைய செய்திகள்

ஸ்டாலின் அறிவித்திருப்பது கண்துடைப்பு நாடகம்

கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா குற்றச்சாட்டு

மதுரை

234 தொகுதிகளுக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று ஸ்டாலின் அறிவித்து இருப்பது கண்துடைப்பு நாடகம் என்று கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கூறி உள்ளார்.

திருப்பரங்குன்றம் தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து கழக அமைப்பு செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். அப்போது அவருடன் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன் உட்பட பலர் இருந்தனர்

இதன் பின்னர் கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள தென்கால் கண்மாய் 350 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கண்மாயில் படகு சவாரி, நடைபாதை வசதிகளுடன் கூடிய சுற்றுலாதலம் அமைக்க வேண்டும். திருப்பரங்குன்றத்தில் புதிய அரசு இருபாலர் கலை அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும்.

திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட வலையங்குளம் பகுதியில் இருக்கிற மலர் விவசாயிகள் பயன் பெறுகிற வகையில், தனியார் ஆலைகள் கூடுதலாக லாபத்துடன் செயல்படுகின்ற காரணத்தினால், கண்டிப்பாக அரசின் சார்பாக ஒரு வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க வேண்டும்.

நிலையூர் பாசன கால்வாய் கழிவு கால்வாயாக உள்ளது, அதனை தரம் உயர்த்தி நிரந்தர கால்வாயாக ஆணை பிறக்க வேண்டும். திருநகர் ஹாக்கி விளையாட்டு மைதானத்தை சர்வதேச தரத்தில் சேர்க்கை இழை ஹாக்கி மைதானமாக உருவாக்கிட வேண்டும்.

நாகமலை புதுக்கோட்டை பகுதியில் தொழில்பேட்டை அமைக்க வேண்டும். திருப்பரங்குன்றம் தொகுதியில் கைத்தறி நெசவாளர்கள் அதிகமாக உள்ளனர். நிலையூர் கைத்தறி நகரில் மிகுந்த ஏழ்மை நிலையில் நெசவுத்தொழில் செய்பவர்கள் அதிகமாக உள்ளனர். அவர்களின் வாழ்வாதார மேம்பட நிரந்தரமாக அரசு கைத்தறி கூடம் அமைக்க வேண்டும்.

அவனியாபுரத்தில் உணவு தானியம் பதப்படுத்தும் வண்ணம், புட் கோர்ட் அமைக்க வேண்டும். திருமங்கலம் நீட்டிப்பு கால்வாய் வடபழஞ்சி , தென்பழஞ்சி, சாக்கிலிப்பட்டி, வேடர் புளியங்குளம், தனக்கன்குளம், தோப்பூர் வரை நீடித்து அனைத்து கண்மாய்களிலும் நீர்வழிச்சாலைகளை ஏற்படுத்தி தர வேண்டும். திருப்பரங்குன்றம் அரசு பொது மருத்துவமனையில், நவீன ஸ்கேன் சென்டர் மற்றும் ஜெனரேட்டர் வசதி அமைத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு ஆட்சியரிடம் கொடுக்கப்பட்டது

முதலமைச்சர் ஸ்டாலின் 234 தொகுதிகளுக்கும் ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த ஆயிரம் கோடி என்பது ஓர் ஆண்டுக்கான திட்டமா அல்லது மூன்றரை ஆண்டு கால திட்டமா என்பது குறித்து சரியான விளக்கம் இல்லை. கடந்த காலங்களில் எடப்பாடியார் முதலமைச்சர் இருந்த பொழுது, சட்டமன்ற உறுப்பினர்களை நேரில் அழைத்து கோரிக்கைகளை கேட்பார். உடனடியாக திட்டங்களை செயல்படுத்துவார். அதற்கு நிதி வரைமுறை இருக்காது.

மதுரை மாவட்டத்தில் கடந்த கடந்த ஐந்து ஆண்டுகள் மட்டும் ரூபாய் 5,000 கோடிக்கு மேல் திட்டங்களை எடப்பாடியார் வழங்கியுள்ளார். இன்றைக்கு எடப்பாடியார் கொண்டு வந்த திட்டங்களை தான் முதலமைச்சர் திறந்து வைத்து கொண்டிருக்கிறார்.

சட்டமன்றத்தில் கூட நாங்கள் பல்வேறு கோரிக்கைகளை அளித்தோம். ஆனால் அதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இதுவரை அதற்கான அரசாணை வெளியிடப்படவில்லை. ஆகவே அதுபோல இதுவும் கண்துடைப்பு நாடகமா என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இவ்வாறு கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார்.