திருவண்ணாமலை

பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு அரிசி, பருப்பு வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ வழங்கினார்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காளசமுத்திரம் அரசு துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு அரிசி பருப்பு வழங்கும் திட்டத்தை வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட போளூர் ஒன்றியம் காளசமுத்திரம் துவக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு அரிசி பருப்பு வழங்கும் திட்டம் துவக்கவிழா நடைபெற்றது. இவ்விழாவில் வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ சிறப்பு விருந்தினராக பங்கேற்று பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களிடம் தலா 3 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு வழங்கினார்.

பின்னர் வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ பேசியதாவது:-

படிக்கும் மாணவர்களின் நலன் கருதி அவர்களின் பெற்றோர்களுக்கு ஒருமாதத்திற்கு தேவையான அரிசி பருப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். இதனை பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார். அதன்படி மாணவர்களின் பெற்றோர்களுக்கு வழங்கப்படுகிறது.

மேலும் படிக்கும் மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து வகுப்பிற்கு டிவி மூலம் பாடம் நடத்தும் திட்டம் அறிமுகம் செய்து அனைத்து பாடங்களும் நடத்தப்பட்டு வருகிறது. அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதி பல்வேறு சேனல் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் அரசின் திட்டங்களை பயன்படுத்தி வாழ்வாதாரத்தினை வளர்த்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் கலைவாணி, உதவி தொடக்க கல்வி அலுவலர் சுந்தர், பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி, பள்ளியின் தலைமையாசிரியர் டேவிட்ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.