தற்போதைய செய்திகள்

நிவர் புயலால் மின்வாரியத்துக்கு ரூ.64 கோடி இழப்பு – அமைச்சர் பி.தங்கமணி தகவல்

நாமக்கல்

நிவர் புயலால் மின்சார வாரியத்துக்கு ரூ.64 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.

நாமக்கல்லில் கழக அமைப்பு செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசு 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளித்து அதன் காரணமாக இன்று தமிழகத்தில் அரசு பள்ளி மாணவ மாணவிகள் பயன் பெற்றுள்ளனர். நாமக்கல்-திருச்சி சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே இதுகுறித்து முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த வகையில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் சாலைப் பணிகள் தொடங்கியுள்ளன.
நிவர் புயலால் மின்சார வாரியத்துக்கு இதுவரை ரூ.64 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து புயல்களின் தாக்கம் இருப்பதால் அதுதொடர்பாக ஏற்படும் இழப்புகளை கணக்கிட வேண்டியதும் உள்ளது. அதேபோல, புரெவி புயல் தாக்கத்தையும் மின் வாரியம் எதிர்கொண்டுள்ளது. புயலின் வேகத்தை பொருத்து மின்சாரம் துண்டிக்கப்படும். புயல் ஓய்ந்த பிறகு மின் சீரமைப்பு செய்து மின்சாரம் அளிக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.

பேட்டியின்போது அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ், நாமக்கல் மாவட்ட கழக அவைத்தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவருமான பி.ஆர்.சுந்தரம், நாமக்கல் நகர கழக செயலாளரும், தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.பி.பாஸ்கர், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சாரதா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பெ.அய்யண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.