தற்போதைய செய்திகள்

அமைப்பு சாரா நல வாரிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி – தொழிலாளர் துறை ஆணையர் தொடங்கி வைத்தார்

சென்னை

ஆன்லைன் மூலம் பதிவு செய்த அமைப்பு சாரா நல வாரிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணியை தொழிலாளர் துறை ஆணையர் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் அமைப்புச் சாரா தொழிலாளர்கள் நலன்களை பாதுகாப்பதற்கான தமிழ்நாடு தொழிலாளர் துறையின் கீழ் 17 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் இயங்கி வருகின்றன. அதன்படி தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம், தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் சமு்க பாதுகாப்பு நல வாரியம், தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுநர்கள் நல வாரியம், தமிழ்நாடு சலவை தொழிலாளர்கள் நல வாரியம், தமிழ்நாடு முடி திருத்துவோர் நல வாரியம் தமிழ்நாடு தையல் தொழிலாளர்கள் நல வாரியம், தமிழ்நாடு கைவினை தொழிலாளர்கள் நல வாரியம், தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரியம், தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெய்யும் தொழிலாளர்கள் நல வாரியம், தமிழ்நாடு காலணி. தோல் பொருட்கள் உற்பத்தி மற்றும் தோல் பதனிடும் தொழிலாளர்கள் நல வாரியம், தமிழ்நாடு ஓவியர் நல வாரியம்,

தமிழ்நாடு பொற்கொல்லர் நல வாரியம், தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் நல வாரியம், தமிழ்நாடு வீட்டுப்பணியாளர்கள் நல வாரியம், தமிழ்நாடு விசைத்தறி நெசவாளர்கள் நல வாரியம், தமிழ்நாடு பாதையோர வணிகர்கள். கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் நல வாரியம், தமிழ்நாடு சமையல் தொழிலாளர்கள் நல வாரியம்ஆகிய 17 வாரியங்களில் தொழிலாளர்கள் தங்களை உறுப்பினர்களாக பதிவு செய்வதற்காக மாவட்ட அளவிலான தொழிலாளர் துறை உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகங்களுக்கு நேரடியாக செல்ல வேண்டி இருந்தது.

தொழிலாளர்கள் தங்களை பதிவு செய்ய மாவட்ட அலுவலகங்களுக்கு நேரடியாக செல்வதில் சிரமம் ஏற்பட்டு வந்தது, இந்த சிரமத்தைப் போக்கும் விதமாக தொழிலாளர்கள் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்தே இணையதளம் மூலம் https://labour.tn.gov.in என்ற இணையதள முகவரியில் 17 வாரியங்களிலும் தங்களது பெயர்களை உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ளும் வசதி தொழிலாளர் துறையால் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு இணையதளம் வாயிலாக பதிவு செய்து கொண்ட அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணியினை தொழிலாளர் ஆணையர் இரா,நந்தகோபால் நேற்று தொழிலாளர் ஆணையரகத்தில் துவக்கி வைத்து பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு அடையாள அட்டையை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய செயலாளர் அ.யாஸ்மின் பேகம், தொழிலாளர் கூடுதல் ஆணையர் (சமரசம்) க.ஜெயபால். தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் நல வாரிய செயலாளர் ஆ,திவ்யநாதன். சென்னை. தொழிலாளர் இணை ஆணையர்-1 பா.மாதவன் மற்றும் உதவி ஆணையர் (ச.பா.தி) சு.பா. சாந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.