தமிழகத்துக்கு 60 சதவீத நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்

சென்னை
தமிழகத்தில் கல்வி உதவித் தொகைக்காக மத்திய அரசு 60 சதவீதம் நிதியை வழங்கவேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது.
தமிழகத்தில் கல்வி உதவித் தொகைக்காக செலவிடப்பட்ட தொகையை மத்திய அரசு விடுப்பது தொடர்பான தற்போது உள்ள பிரச்னையை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். ஒவ்வொரு ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழும் கல்வி உதவித் தொகைக்காக செலவிடப்படும் தொகை அடுத்த ஐந்தாண்டு திட்டத்தில் மாநிலத்துக்கான பொறுப்புடமை நிதியாகச் சேர்க்கப்படும். இந்த நிதி ஐந்தாண்டின் இறுதியில் முடிவு செய்யப்பட்டு அடுத்தடுத்த ஆண்டுகளிலும் திட்டம் தொடரும்.
கல்வி உதவித் தொகை திட்டத்துக்காக கடந்த 2012-13-ஆம் நிதியாண்டில் ரூ.353.33 கோடி பொறுப்புடமை நிதியாகச் செலவிடப்பட்டது. இந்தத் தொகையானது 2017-18-ஆம் நிதியாண்டில் ரூ.1,526.46 கோடியாக உயர்ந்துள்ளது. இதன்மூலம், கல்வி உதவித் தொகைக்காக 2017-18-ஆம் ஆண்டில் ரூ.1689.34 கோடியாகவும், 2018-19-ஆம் நிதியாண்டில் ரூ.1910.19 கோடியாகவும், 2019-10-ஆம் ஆண்டில் ரூ.2005.70 கோடியாகவும் செலவிடப்பட்டுள்ளது.
ஆனால், மத்திய அரசின் பங்குத் தொகைகளாக முறையே ரூ.162.88 கோடியும், ரூ.383.73 கோடியும், ரூ.479.24 கோடியும் பெறப்பட்டுள்ளது. நிகழ் நிதியாண்டில் மட்டும் செலவிடப்பட்ட தொகை ரூ.2,100.90 கோடியாகும்.ரூ.2 ஆயிரம் கோடிக்கும் மேல் செலவிட்டாலும், தற்போதைய நிதியாண்டில் மத்திய அரசிடம் இருந்து பங்குத் தொகையாக தமிழகத்துக்கு கிடைக்கும் தொகை ரூ.584.44 கோடியாக மட்டுமே உள்ளது. இது மாநில அரசிற்கு கடுமையான நிதி சுமையை ஏற்படுத்தும். மத்திய அரசின் கல்வி உதவித் தொகை திட்டத்துக்கு மாநில அரசு தனது சொந்த நிதியில் இருந்து மிகப்பெரிய அளவுக்குச் செலவிட வேண்டிய நிலை உள்ளது.
எனவே, கல்வி உதவித் தொகை திட்டத்துக்கு மத்திய அரசு 60 சதவீத நிதியையும், மாநில அரசு 40 சதவீத நிதியையும் அளிக்க வேண்டும். இதுதொடர்பாக கடந்த 2018-ஆம் ஆண்டு இரண்டு முறையும், கடந்த ஆண்டு ஜனவரியில் ஒரு முறையும் தங்களுக்கு கடிதங்களை எழுதியுள்ளேன். எனவே, இந்த பிரச்சனையில் மத்திய சமூக நீதிக்கான துறைக்கு தேவையான உத்தரவுகளை தாங்கள் பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கல்வி உதவித் தொகைத் திட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் பங்கினை 60, 40 என்ற விகிதத்தில் பிரிக்க வேண்டும்.
இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.